TVK Vijay, Aadhav Arjuna: ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பதவியா?.. விஜய்யின் மெகா ப்ளான் என்ன?
TVK Vijay, Aadhav Arjuna: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

TVK Vijay, Aadhav Arjuna: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” என்ற அமைப்பின் நிறுவனர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் பேசியதாகவும், இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட் ஆகியோர் உடனிருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் மாநில துணை பொதுச்செயலாளர் அல்லது மாநில இணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் மெகா ப்ளான் என்ன?
ஆதவ் அர்ஜுனாவின் இணைப்புக்கு பின்னர் மற்ற கட்சியில் இருந்து வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளை மேற்கொள்வது, ஆதவை தவெகவில் இணைத்து முக்கிய பொறுப்பு கொடுத்து கட்சியின் கட்டமைப்பு வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. விஜயின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சியில் இணைந்து செயலாற்றும் பட்சத்தில் அரசியல் களம் மேலும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்த்து சொன்ன விசிக தலைவர் திருமாவளவன்
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில், நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா சந்தித்தார் என்பது உண்மை. விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணையப்போகிறார் என்பதில் மகிழ்ச்சி, வாழ்த்துகள்.. எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான் என அவர் கூறியுள்ளார்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து, ஆளும் திமுக அரசு குறித்து தொடர்ந்து விமர்சங்களை முன்வைத்து வந்தார். தொடர்ந்து, அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது, விசிகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் எதிரொலியாக, ஆதவை 6 மாத காலத்துக்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டார்.

தொடர்புடையை செய்திகள்