பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! விமானத்தில் அழைத்து வர கூட பணம் இல்லையா? அதிமுக கண்டனம்!
“உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது! என ஜெயக்குமார் ட்வீட்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது, பீகார் தர்பங்கா பல்கலைக் கழகத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது முதுகில் தாக்குதல் நடத்தி உள்ளனர். பிறகு தமிழக வீராங்கனை தாக்குதல் நடத்தினார். விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பயிற்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், பயிற்சியாளர் விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் தமிழக விளையாட்டுத்துறை செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்து உள்ளார்.
அதிமுக கண்டனம்!
பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ’எக்ஸ்’ தள பக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ள வலைத்தள பதிவில், “உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!
விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளார். வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவம் அளிக்க வேண்டும். விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்! மீட்பதற்கு அரசு தயாரா?” என தெரிவித்து உள்ளார்.
டிடிவி தினகரன் கண்டனம்
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் - வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
