U.V.Swaminatha Iyer: ‘எரிக்க வேண்டியது சுவடியை அல்ல ஆகமத்தை’ உ.வே.சா பிறந்தநாள்
தமிழ் முனிவர், தமிழ்த்தாத்தா என்று தமிழ் கூறும் நல்லுலகால் உரிமையோடு அழைக்கப்படுவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்.
இன்றையச் சூழலில் உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என யுனெஸ்கோ ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில் உலக அரங்கில் தமிழ் தொன்மை வாய்ந்த மொழி என்று தமிழர்கள் ஓங்கி ஒலிப்பதற்கு 10 ஆயிரம் ஆண்டு கால நினைவுகளின் தொகுப்பான சங்க இலக்கியமே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
செம்மொழியான தமிழில் கையடக்க செல்போன்களில் இன்று திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை தொடங்கி சங்க இலங்கியங்களை நம்மால் படிக்க முடிகிறது. ஆனால் நாம் நம் விரல் நுனியில் தேடும் தமிழ் இலக்கியங்கள் இன்றும் உயிரோடும் உயிர்ப்போடு இருப்பதற்கு பல நூறு பேர் தங்கள் கடின உழைப்பை செலுத்தி உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் தான் தமிழ்த்தாத்தா உ.வெ.சாமிநாத அய்யர்.
தமிழ் முனிவர், தமிழ்த்தாத்தா என்று தமிழ் கூறும் நல்லுலகால் உரிமையோடு அழைக்கப்படுவர்.டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர்.
இவர் கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரத்தில் 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் வேங்கட சுப்பையா தாயார் சரஸ்வதி அம்மையார்.
கல்வி
சிறு வயதில் ஏடும் எழுத்தாணியும் கொண்டே திண்ணை பள்ளியில் பயில தொடங்கினார். ஆரம்பத்தில் தந்தையிடம் தமிழ் கற்ற தொடங்கிய உவேசா நிகண்டு சதகம் போன்ற பழமையான நூல்களை கற்க தொடங்கினார். பள்ளிப்படிப்பை முடித்த உவேச தமிழில் புலமை பெற பல்வேறு தமிழறிஞர்களிடம் தமிழ் கற்க தொடங்கினார். தன் 17 வயதில்மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்க தொடங்கி சுமார் 6 ஆண்டுகள் அவரிடம் பயின்றார். அவர் மறைவிற்கு பிறகு சுப்ரமணிய தேசிகர் உள்ளிட்ட பல அறிஞர்களிடம் தமிழ் கற்றார்.
பின் தனது 25 வயதில் கும்பகோணம் அரசுக்கல்லூரியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். பின்னர் 1903ல் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் பேராசிரியாக பணியாற்றதொடங்கினார். உவேசா மாநிலக்கல்லூரியில் பணியாற்ற தொடங்கியதிலிருந்து அக்கல்லூரி மாணவர்களிடேயே தமிழ் விருப்பமான ஒன்றாக மாறியது என்று சொல்லும் அளவிற்கு அவரது கற்பித்தல் அமைந்தது. தொடர்ந்து 16 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு வெற்றார்.
என்ன செய்தார் உவேசா
அக்காலத்தில் பல தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் மட்டுமே முடங்கி கிடந்தது. அவற்றை படியெடுப்பதும் மிகுந்த சிரமம், மேலும் பல ஓலைச் சுவடிகள் செல்லரித்துப் போயிருந்ததால் அவற்றை படிப்பது சவாலான காரியமாக இருந்தது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் ஓலைச்சுவடிகளில் ஒடுங்கி கிடந்த தமிழ் இலக்கியங்களை சேகரித்து அவற்றை முறைப்படுத்தி பதிப்பிப்பதை தன் வாழ்நாள் பணியாக செய்ய தொடங்கினார். போக்குவரத்து வசதிகள் பெரும்பாலும் இல்லாத அந்த நாட்களில் ஏடுகளை சேகரிக்க பல நூறு மையில்கள் நடந்தே சென்று ஓலைச்சுவடிகளை சேகரித்துள்ளார்.
ஆகமத்தை எரிக்கச் சொன்னாரா?
ஒரு முறை வரகுண பாண்டியன் பாதுகாத்து வைத்திருந்த ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் கோயிலில் இருப்பதாக அறிந்து அங்கு சென்று விசாரித்துள்ளார் உவேசா. அப்போது அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவர் குப்பை கூலமாக இருந்த அவற்றை ஆகம சாஸ்திரத்தில் கூறிய படி நெய்யில் நனைத்து குழி வெட்டில் அக்னி வளர்த்து அதில் போட்டு எரித்து விட்டோம் என்று கூறியுள்ளார். இதனால் உள்ளம் நடுங்கிய உவேசா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் தன் வாழ்நாள் முழுவதும் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட உ.வே.சா இப்படி கிடைப்பதற்கரிய தமிழ் பொக்கிஷங்களைத் தீயில் போடச்சொன்னது ஆகமங்கள் என்றால் முதலில் தீயில் போட வேண்டியது ஆகமத்தைத் தான் என்று தன் என் சரித்திரம் என்ற நூலில் எழுதி உள்ளார். இதுபோன்று தமிழின் பெருமைகளை சுமந்து கொண்டிருந்த கொண்டிருந்த ஏராளமான ஏடுகள் கறையான்கள் அரித்தும், ஆடிப்பெருக்கு நாளில் தண்ணீரில் போடப்பட்டதையும் கேட்டு உள்ளம் வெதும்பினார். இத்தனைக்கும் பிறகும் தன் இறுதி மூச்சை பிடித்து வைத்திருந்த ஏடுகளை எல்லாம் தொகுத்து பதிப்பிக்க தொடங்கினார் உ.வே.சா
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
திருத்தக்க தேவர் எழுதி சீவகசிந்தாமணியை 1887ல் ஓலைச் சுவடியில் இருந்து புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து பரிபாடல், குறுந்தொகை என பல கிடைப்பதற்கரிய 90க்கும் மேற்பட்ட நூல்களை ஓலைச்சுவரிகளில் இருந்து தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.
உ.வே.சாவின் தமிழ்த்தொண்டை பாராட்டி இந்திய அரசு 1906ம் ஆண்டு மகாமகோபாத்யாய என்ற பட்டத்தை வழங்கியது இந்திய அரசு. 1932ல் சென்னை பல்கலைக்கழக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா தனது 87 வது வயதில் 1942 ஏப்ரல் 28 ம் தேதி இயற்கை எய்தினார்.
டாபிக்ஸ்