Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Tamil New Year: தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? வரலாறு சொல்வது என்ன?

Kathiravan V HT Tamil
Apr 14, 2024 07:30 AM IST

”Tamil New year 2024: இதுவரை கிடைத்த இலக்கிய மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள்படி தமிழ்நாட்டில் அறுவடை நாளை கொண்டாடும் வழக்கம் இருந்ததே தவிர புது வருட பிறப்பை கொண்டாடியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை”

தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு..!

அண்டிப்பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வ்வாத அறுபது ஆண்டுகள்!

தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்ற பாரதிதாசன் கவிதை டைம் லைன்கள் முழுக்க பரவத் தொடங்கிய நிலையில் திராவிட கருத்தியல்களை கொண்ட பலரும் ‘இனிய சம்ஸ்கிருத புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு தங்களின் மேலான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

12 மாதங்களின் பெயர்களும் தூய தமிழில் இருக்க ஆண்டுக்கு மட்டும் எப்படி சமஸ்கிருத பெயர் வந்தது என்ற திராவிட இயக்கத்தினரின் வாதத்தை இதில் தவிர்த்துவிட முடியாது.

கீழ்த்திசை நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆனால் இன்று தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி வங்காளம், அசாம், ஒடிசா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய பிற மாநிலங்களிலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கும், பர்மா, கம்போடியா, லாவோஸ், வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கூட இன்றுதான் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் புவியியல் ரீதியாக தொண்டுதொட்டு கொண்டாடப்பட்டு வருவதாக கூறுகின்றனர் ஒருசாரார்.

தை ஒன்றாக இருந்த தமிழ்ப்புத்தாண்டை ஆரியர்கள் சித்திரைக்கு மாற்றினார்கள் என்றால் மேற்கண்ட மற்ற நாடுகளிலும் புத்தாண்டை ஆரியர்கள் மாற்ற கடற்பயணம் மேற்கொண்டார்களா என்ற கேள்வியும் ஒரு சாரார் வைக்கின்றனர்.

ஜோதிடம் சொல்வது என்ன?

ஜோதிடப்படி சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக கொண்டு கணிக்கப்படும் முறை இந்தியாவில் உள்ளது.

சூரியன் ’மேழம்’ எனப்படும் மேஷராசியில் சஞ்சரிக்கும் சித்திரை ஒன்றாம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சங்க இலக்கியமான நெடுநெல்வாடையில் மேழமே முதல் ராசி என்ற குறிப்பு உள்ளது.

ஆனால் தமிழர்களிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகள் தெளிவாக கிடைக்கவில்லை.

ஆவணியில் புத்தாண்டு?

எட்டாம் மற்றும் ஒன்பதால் நூற்றாண்டுக்கு பிந்தைய நிகண்டுகளில் அவணி மாதமே முதல் மாதம் என்ற குறிப்பை அறிய முடிகிறது. ஆனால் ஆவணியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்கான எந்த தரவுகளோ சான்றுகளோ இல்லை.

போர்த்துகீசியர்கள் சொல்வது என்ன?

1796ஆம் ஆண்டில் இலங்கையில் சித்திரை மாதத்தை ஆண்டின் தொடக்கமாக தமிழர்கள் கொண்டாடியது பற்றிய குறிப்புகள் போர்த்துக்கீசியர்களின் குறிப்புகளில் உள்ளது.

புராணம் சொல்வது என்ன?

ஆனால் தமிழ்ப்புத்தாண்டு குறித்து கூறப்படும் புராணக்கதை மிகவும் வேடிக்கையானது. ஆண்களான கிருஷ்ணரும், நாரத முனிவரும் உடலுறவு கொண்டு பெற்றுகொண்ட 60 மகன்கள்தான் ”பிரபவ” என்று தொடங்கி ”அட்சய” வரைக்குமான சமஸ்கிருத ஆண்டுகள் என்கிறது அபிதானசிந்தாமணி.

புத்தாண்டும் கலைஞரும்!

1972ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தமிழ்நாடு அரசு பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்த நினைத்தார்.

இதற்கு உதவியாக 1935ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழறிஞர்கள் ஒன்று கூடி திருவள்ளுவர் கி.மு.31ஆம் ஆண்டில் இருந்து ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டி தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகவும், இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாட முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக முதலமைச்சரான கருணாநிதி தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு என்று அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிட்டார். பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 2011ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை முதல்நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தார்.

இந்த நிலையில் மறைமலை அடிகள் தலைமையில் ஒன்றுகூடிய தமிழறிஞர்கள் விவாததித்த அம்சங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்று வரை சுற்றி சுழன்று வருகிறது.

மறைமலை அடிகளை சுற்று சுழலும் சர்ச்சை

கி.மு.31ஆம் ஆண்டில் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக மறைமலை அடிகள் உறுதி செய்ததாகவும் ஆனால் அதற்கு மாறாக தை 2ஆம் தேதியை திருவள்ளுவர் பிறந்ததினமாக திமுக அரசு அறிவித்துவிட்டதாக விமர்சனங்கள் உள்ளது.

சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கூட தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் அறுவடை திருநாளாக அறியப்படுகிறதே தவிர புது ஆண்டு பிறப்பாக கொண்டாடப்பட்டதற்கான உறுதியான சான்றுகள் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.