Ramar Worship:ராமரை வழிபடத் தடையா என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - மறுத்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு, தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மறுப்புத்தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ஆம் தேதியான நாளை அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் குடமுழுக்கு செய்யப்படுகிறது.
இந்த ராமர் கோயில் நேரலையை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது என தகவல் வெளியான நிலையில் அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘’ தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் ராமர் கோயில்களில், இந்து சமய அறநிலையத்துறை பூஜை, பஜனைகள், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவது என எந்தவொரு ஆன்மிக சேவையையும் ராமரின் பெயரில் செய்ய அனுமதிக்கவில்லை. ராமர் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும் தமிழ்நாடு போலீஸார் தன்னிச்சையாக தடுக்கின்றனர். பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இத்தகைய இந்துவிரோத வெறுக்கத்தக்க செயலுக்குக் கண்டனங்கள்’’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமாக தனது பதிவினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டினை தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து பி.கே.சேகர் பாபு வெளியிட்டுள்ள பதிவில், ‘’சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச்செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் நாளை பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது எனவும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் சற்று பதற்றம் தணிந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9