Hindu Munnani: இந்து முன்னணி தலைவர்களை தட்டித் தூக்கும் போலீஸ்! ஸ்டாலினை சாடும் எல்.முருகன்!
அப்போது இந்த அடாவடித்தனமான கைது நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும், திருப்பரங்குன்றத்திற்கு தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி நியாயமாகும்?

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்திற்கு திட்டமிட்ட இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்ததற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையப்படுத்தி, இந்து விரோத அரசியலை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்ற 'போலி திராவிட மாடல்' திமுக அரசு, இந்து முன்னணி கட்சியின் மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வர சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் பாஜக தலைவர்களை கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக வணங்கப்பட்டு வருகின்ற திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டவர்களை தடுக்க திராணியற்ற இந்த திமுக அரசும், அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற 'காவல் துறையும்', இன்று இந்து அமைப்பினர் போராடுவதால் மதக் கலவரம் உருவாகிவிடும் என்று கூறி, தமிழகம் முழுவதும் உள்ள இந்து அமைப்பினரை கைது செய்து வருவது சர்வாதிகாரத்தின் உச்சம்.