வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Kathiravan V HT Tamil
Published Jun 14, 2025 05:24 PM IST

”அந்தக் காவல் நிலையத்தை பார்வையிட சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்தக் காவல் நிலையத்தை பார்வையிட சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண மக்களைத் தாண்டி, தற்போது காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இதையெல்லாம் கவனிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியாத சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை. சென்னையில் அண்மையில் மட்டும் 12 கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோட்டங்களில் வசிக்கும் முதியவர்களை குறிவைத்து கொங்கு பகுதியில் நடக்கும் கொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோலவே தென் மாவட்டங்களிலும் கொலைகள் நடக்கின்றன.

நெல்லையில், முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் அவர்கள், தொழுகை முடித்து வந்தநிலையில் கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டையில், சமூகசெயற்பாட்டாளர் ஜெகபர் அலி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்தேறியது. தமிழகத்தில் பள்ளி வளாகங்களில் கூட உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.போதைப்பொருட்கள், மதுபானம் பெருகி இளைய தலைமுறையை அழிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா இரண்டா?

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது திமுக அரசு. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருகிறார். பல வழக்குகளில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு திராணியற்ற திமுக அரசு, போலி குற்றவாளிகளை கைது செய்து வழக்கை முடிக்க முனைகிறது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருந்தால் மீண்டும் மீண்டும் குற்றச்சம்பவங்கள் நடப்பது ஏன்?

தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் உள்ளது. V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதுடன் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.