எடப்பாடி சந்திப்பு முடிந்ததும் அமித்ஷா போட்ட ‘தமிழ்’ பதிவு.. அதிமுக-பாஜக கூட்டணி உறுதியா?
‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று தமிழ் மற்றும் ஹிந்தியில் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிபடுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய இல்லத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முணுசாமி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், தம்பிதுரை எம்.பி உள்ளிட்டோரை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மீண்டும் என்டிஏ கூட்டணியை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க, பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக குழுவாகவும், தனியாகவும் அதிமுகவினருடன் பேச்சு வார்த்தை நடத்திய அமித்ஷா, இருதரப்பு கோரிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளார்.
பேச்சுவார்த்தை திருப்திகரமாக நிறைவுபெற்றதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர், மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் சென்ற பின், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அமித்ஷா பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவு, கிட்டத்தட்ட அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது.
ராஜ்ய சபாவில் திமுக அரசுக்கு எதிரான தன்னுடைய பேச்சு அடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ள அமித்ஷா, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று தமிழ் மற்றும் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அமித்ஷா நேரடியாக, ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு’ என்று கூறியிருப்பது, அதிமுக தலைமையிலான கூட்டணியை தான் என்பது கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடிகிறது.
இதன் மூலம், திமுக அரசை, அதிமுக கூட்டணியோடு தமிழகத்தில் அகற்ற அமித்ஷா எடுக்கும் முயற்சியை அறிந்து கொள்ள முடிகிறது. பாஜக-அதிமுக கூட்டணி குறித்து மறைமுக பேச்சுகள் இருந்து வந்த நிலையில், அமித்ஷாவின் இந்த பதிவு, கிட்டத்தட்ட உறுதி செய்யததைப் போலவே உள்ளது.
