தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Birthday: எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

EPS Birthday: எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

Karthikeyan S HT Tamil
May 12, 2024 12:59 PM IST

EPS Birthday, Actor Vijay: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.

70 கிலோ கேக்

இதனிடையே சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.

பிறந்தநாளையொட்டி காலை முதலே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தளவாய்சுந்தரம், காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இது தவிர எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விஜய்யின் எக்ஸ் தளப் பதிவில், "அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்." என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழத்துச் செய்தியில், "தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 1954ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வசித்த கருப்ப கவுண்டர் - தவசியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற சகோதரரும், ரஞ்சிதம் என்ற சகோதரியும் உள்ளனர்.

பள்ளிப்படிப்புக்கு பின்னர் ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் பிஎஸ்சி படித்த பழனிசாமி, வீட்டில் நடைபெற்று வந்த விவசாய பணிகளை பார்த்துக் கொண்டதுடன், வெல்லம் மற்றும் சர்க்கரை வியாபாரத்தையும் மேற்கொண்டார். எம்ஜிஆர் மீது தீவிர ஆர்வம் கொண்ட பழனிசாமி 1974ஆம் ஆண்டு தன்னை முறைப்படி அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதிமுக கிளைச்செயலாளராக தனது அரசியல் வாழ்கையை தொடங்கிய பழனிசாமி கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்