புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. விஜய் இருக்கும் மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. விஜய் இருக்கும் மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!

புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. விஜய் இருக்கும் மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!

Karthikeyan S HT Tamil
Published Jun 16, 2025 02:05 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கும், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருவது அக்கட்சியின் நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!
புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தவெகவின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அஜிதாவுக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் அஜிதா ஆக்னல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, தூத்துக்குடி மாவட்ட தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், அம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் நேற்று மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

இதற்கிடையில் அஜிதா ஆக்னலுக்கு போட்டியாளராக இருக்கும் சாமுவேல் மற்றும் அன்னை சத்தியா ஆகியோரை அழைத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கான நிகழ்ச்சி அனுமதி சீட்டுக்களை பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜிதா தனக்கு அனுமதி சீட்டு வழங்கினால் மட்டுமே மாணவர்களை அழைத்து வருவேன் எனக் கூறியிருக்கிறரா். இதனால் வேறுவழியின்று மதுரை மாவட்ட நிர்வாகியை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி அஜிதா அழைத்துவரப்பட்டார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவர்களுடன் காத்திருந்த அஜிதா, பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, விழாவில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள், பெற்றோர்களை அரங்க வாயிலில் நின்று வரவேற்ற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், அஜிதா வருகையின்போது வரவேற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இப்படியாக நிகழ்ச்சி துவங்கும் வரை இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு விஜய் இருந்த மேடையிலேயே எதிரொலித்தது.

மாணவர்கள் தங்களை அழைத்து வந்த மாவட்ட பொறுப்பாளருக்கு நன்றி தெரிவிக்கும் போது, அஜிதா பெயரை சொல்லும் போது நேரலை துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் மாவட்ட செயலாளர் பிரச்சனையில், போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் அஜிதாவுக்கு, விழாவில் வரவேற்பு அளிக்கப்படாதது, அம்மாவட்ட நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.