Aadhav Arjuna: ’ஒப்புக்கு சப்பாணியா ஆதவ் அர்ஜூனா? பதவி கொடுத்தும் ஆதவ் அர்ஜூனாவுக்கு செக் வைத்த விஜய்!'
ஏற்கெனவே விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்வார் என விஜய் தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உள்ள ஆதவ் அர்ஜூனா தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்படுவார் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
ஜான் ஆரோக்கிய சாமி உடன்….!
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டு உள்ளார். விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து உள்ள ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பை விஜய் வழங்கி உள்ளார்.
ஏற்கெனவே விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்வார் என விஜய் தெரிவித்து உள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவின் வியூக வகுப்பாளர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜூனா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் கிஷோரை திமுகவுக்காக வேலை செய்ய வைத்ததில் தனது பங்கு பிரதானமானது என்று முந்தைய பேட்டிகளில் ஆதவ் அர்ஜூனா கூறி இருந்தார்.
சிடிஆர்.நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி
தலைமை கழக இணை பொருளாளராக பி.ஜெகதீஷ், தவெக கொள்கை பரப்பு செயலாளராக ஏ.ராஜ்மோகன், கொள்கை பரப்பு இணை செயலாளர்களாக லயோலா மணி, ஏ.சம்பத் குமார், கேத்ரின் பாண்டியன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
செய்தித் தொடர்பாளராக வீரவிக்னேஷ், இணை செய்தித் தொடர்பாளராக எஸ்.ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராக ஆர்.ஜெயபிரகாஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஏ.குருசரண், ஆர்.ஜே.ரஞ்சன் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
