TVK Vijay : ’நீட் விவகாரத்தில் வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறது திமுக!’ அரசை விமர்சித்து விஜய் ட்வீட்!
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தவெக தலைவர் விஜய் ட்வீட் செய்து உள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்து பதிவில், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
விஜய்க்கு திமுக பதிலடி
தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, முன்னேறியிருப்பதற்கு காரணமே திராவிட இயக்கங்கள்தான். ஒன்றிய அரசு தற்போதுதான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இலக்கு வைத்து முயற்சித்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அந்த இலக்கை எப்போதோ எட்டிவிட்டது. காரணம், தமிழ்நாட்டில் இருந்த திராவிட ஆட்சிகள்தான். திராவிட இயக்கங்கள் குறித்து குறை சொல்ல எவருக்கும் யோக்கியதை இல்லை. இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல, அரசியல். மக்கள் பிரச்சினைக்காக போராடிய இயக்கம், இரத்தம் சிந்திய இயக்கம் இன்று ஆட்சியில் இருக்கிறது எனில் மக்கள் உணர்வை புரிந்துகொண்ட காரணத்தினால்தான்.
நீட் தேர்வு இருக்கும்வரை அதை எதிர்த்து திமுக போராடும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே தெரிவித்துள்ளார் என கூறி உள்ளார்.