TVK Vijay: குடியரசு தினம்! ஆளுநரின் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்!
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டிலேயே மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரும் தேநீர் விருந்து புறக்கணிப்பும்!
குடியரசு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அரசு அதிகாரிகள், பிரபலங்கள், சமூகசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த அண்டுக்கான ஆளுநர் உரையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திமுக, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. தமிழ்நாடு அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
ஆளுநரை சந்தித்த விஜய்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுகக் கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்து இருந்தார். இது தொடர்பாக அப்போது தவெக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அழைப்பை புறக்கணித்த விஜய்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு விஜய்க்கு அழைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தவெக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டிலேயே மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
