TVK Vijay: மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. பனையூரில் இருந்து இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளோடு இன்று (ஜனவரி 29) ஆலோசனை நடத்துகிறார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் இரண்டாம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிப்பு
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கடந்த 24 ஆம் தேதி அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கியப் பொறுப்புகளுக்கான நியமன ஆணைகளை விஜய் வழங்கியிருந்தார். மொத்தமாக 19 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு நியமன கடிதத்துடன், வெள்ளி நாணயத்தையும் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
'Work From Home' அரசியல்வாதி
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சி தொடங்கி இருந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் தான் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை, செயல் திட்டத்தை அறிவித்ததுடன் மத்தியில் ஆளும் பாஜகவையும், மாநிலத்தை ஆளும் திமுகவையும் நேரடியாக விமர்சித்து பேசியிருந்தார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் அறிக்கை, அவ்வபோது பனையூரில் ஆலோசனை கூட்டம் என்பது மட்டுமே விஜய்யின் அரசியலாக இருந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கூட பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்துதான் நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். இதனாலே 'Work From Home' அரசியல்வாதி என்று விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
பனையூர் டூ பரந்தூர் அரசியல்
விமர்சனங்கள் ஒருபுறம் எழுந்தாலும், திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் விஜயின் பேச்சில் வீரியம் குறையாமல் இருந்தது. தொடர்ந்து, பெரியார் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை விஜய் நேரில் சந்திக்க திட்டமிடப்பட்டு அந்த சந்திப்பும் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை மீண்டும் ஒருமுறை சீண்டியிருந்தார். "அரிட்டாப்பட்டில உங்களோட நிலைப்பாடை பாராட்டுறேன். அரிட்டாப்பட்டி மக்களை மாதிரிதான பரந்தூர் மக்களும், என விஜய் பேசியதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. 'நம்புற மாதிரி நாடகம் ஆடுறதுல நீங்கதான் கில்லாடியச்சே..' என பேசி தனது திமுக எதிர்ப்பை இன்னும் வலுவாக பதிய வைத்தார்.
மீண்டும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பனையூரில் நடக்கும் இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் 2 ஆவது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்