Vijay About ADMK: அதிமுக-பாஜக கூட்டணிக்கு திமுகவை திட்டும் விஜய்! காரணம் இதுதான்!
தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் தி.மு.க.விற்கு எதிரான ஒரே அணி' என்று பா.ஜ.க.வும், 'தாங்கள்தான் பா.ஜ.க.விற்கு எதிரான அணி' என்று தி.மு.க.வும் நாடகத்தை நடத்துவர். தமிழ்நாட்டு மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். இனி, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-
பா.ஜ.க. - தி.மு.க. மறைமுகக் கூட்டு
குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பா.ஜ.க.வும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் தி.மு.க.வும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னது போல, உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஊழல் மலிந்த தமிழ்நாட்டில் நடப்பது என்ன? மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதலமைச்சரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும். ஆனால் இங்கோ ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும் போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இது போன்ற பல செயல்பாடுகள், பா.ஜ.க. - தி.மு.க. மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.
