‘234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!’ 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!’ 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

‘234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!’ 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

Kathiravan V HT Tamil
Published Mar 28, 2025 02:11 PM IST

"32 ஆண்டுகளாக உழைத்த தொண்டர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி வழங்கிய ஒரே தலைவர் நம்மவர். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால், இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. பணம் கொடுத்து பதவி வாங்க முடியாது" என திட்டவட்டம்.

‘234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!’ 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!
‘234 தொகுதிகளுக்கும் விஜய் முகம்தான் வேட்பாளர்!’ 2026 தேர்தல் வியூகம் இதுதான்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

தவெக பொதுக்குழு கூட்டம் 

TVK General Body Meeting: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.

மறைமுகமாக திட்டுகின்றனர்

தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், "மார்ச் 1 அன்று ஒரு அரசியல் தலைவரின் பிறந்தநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில், அனைத்து கட்சித் தலைவர்களும் நம் தலைவரைப் பற்றி மட்டுமே பேசினர். அவர்களின் மனதிலும் நம் தலைவர் உள்ளார். எதிர்க்கட்சிகள் நேரடியாக விமர்சிக்க தைரியமில்லாமல், மறைமுகமாக திட்டுகின்றனர். ஆனால், சாதாரண தொண்டர்களான ஆட்டோ ஓட்டுநர், மூட்டை தூக்குபவர்களிடம் பதில் சொல்ல அவர்களால் முடியாது. ஏனெனில், எங்கள் பேச்சாளர்கள் திறமையானவர்கள்," என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். "எங்கள் தொண்டர்கள் ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை உடனடியாக எதிர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்," என்று பெருமிதம் தெரிவித்தார்.

கட்சி பதவிகள் வழங்குவதில் பிரச்னையா?

கட்சியின் தலைவரை புகழ்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், "32 ஆண்டுகளாக உழைத்த தொண்டர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி வழங்கிய ஒரே தலைவர் நம்மவர். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஆனால், இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. பணம் கொடுத்து பதவி வாங்க முடியாது," என்று கூறினார். "தலைவர் புகழை விரும்பாதவர். அவருடன் தனியாக பேசும்போது ஒரு வார்த்தை புகழ்ந்தாலும், உடனே அடுத்த தலைப்புக்கு செல்கிறார்," என்று தலைவரின் பணிவை எடுத்துரைத்தார்.

மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர்

"ஜல்லிக்கட்டு, நீட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கள்ளக்குறிச்சி, பரந்தூர் என எல்லா பிரச்சனைகளிலும் நேரடியாக மக்களை சந்திக்கிறார். பல கோடிகளை விட்டு, மக்களுக்கு சேவை செய்ய வந்தவர் நம் தலைவர். ஆட்சி சரியாக இருந்திருந்தால், அவர் தன் வேலையை பார்த்திருப்பார். ஆனால், மக்களுக்காக 24/7 உழைக்கிறார்," என்று புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

2026 இலக்கு

"68,360 பூத்களில் 52,000-க்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், கேட்கிறார். மாவட்ட செயலாளர்கள் உடனடியாக பூத் கமிட்டிகளை நிறைவு செய்ய வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார். "2026ல் தலைவர் முதலமைச்சராக அமருவார். 234 தொகுதிகளிலும் அவரது முகமே வேட்பாளர். உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி. புதியவர்களையும் வரவேற்று, அவர்களுக்கு பதவி வழங்க தலைவரின் அனுமதியுடன் நடவடிக்கை எடுப்போம்," என்று உறுதியளித்தார்.

மக்களோடு மக்களாக உழைப்போம்

"மக்களோடு மக்களாக இருந்து, அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவோம். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் சிறப்பாக செயல்படும் ஒரே கட்சி தவெக. பாசத்தால் சேர்ந்த இந்த கூட்டம், 2026ல் தலைவரை முதல்வராக்கும்," என்று புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டமாகக் கூறினார். "ஒன்பது மாதங்களில் கடினமாக உழைத்தால், நம் இலக்கை அடைவோம். மக்கள் நம்மை எதிர்பார்க்கிறார்கள்," என்று  கூறினார்.