’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ தவெக தலைவர் விஜய் பேச்சு!
’1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும்’ என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில், பிரபல நாட்டுப்புற பாடகர் கிடாக்குழி மாரியம்மாளின் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் பேச்சு:-
என்னுடைய நண்பரும், ஜன்சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் அவர்கள் தமிழக வெற்றி கழக 2ஆம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தது மகிழ்ச்சி, அவருக்கு எனது நன்றிகள்.
அரசியல் என்றாலே வேற லெவல்தான். அரசியலில் மட்டும்தான் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை என்று சொல்வார்கள்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடித்து போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதை நல்லவர்கள் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில இந்த அதிகார….! இல்லை அது வேண்டாம்.
ஒரு சில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே. என்னடா இவன் திடீர்னு எண்ட்ரி கொடுத்துவிட்டானே. இதுவரை நாம சொன்ன பொய்யை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டுக் கொண்டு இருந்தார்களே!, ஆனால் இவன் சொல்வதெல்லாம் பார்த்தால் மக்கள் மனசுக்கு நெருக்கமாக இருக்கிறதே, இவனை எப்படி க்ளோஸ் செய்யலாம் என்று குழப்பம் வரும்.
அந்த குழப்பத்தில் கத்துவதா, கதறுவதா என்ற செய்வது என்று தெரியாமா? வரவன் போரவனெல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்லி பேசத் தொடங்குவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல், வரும் எதிர்ப்புகளை லெப்ட் ஹாண்டில் டீல் செய்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த கால கட்டம்தான் மிக முக்கியமான காலகட்டம். ஒரு அரசியல் கட்சிக்கு அதன் கட்டமைப்புதான் அடிப்படை பலம். ஆலமரம் போல் ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் அதன் வேர்களும், விழுதுகளும் பலமாக இருக்க வேண்டும். அதனால்தான் அமைப்பை பலம் செய்யும் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்த நேரத்தில் நம்மீது ஒரு புகார் வருகிறது. நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் வெறும் இளைஞர்களாகவே உள்ளார்களாம். ஏன் இருந்தால் என்ன?; அறிஞர் அண்ணா அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது அவர் பின்னாடி நின்றவர்களும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் பின்னாடி நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967, 1977 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது வரலாறு.
கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என புகார் வருகிறது. ஏன் வரக்கூடாதா?, சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெருசு, பெருசா சாதித்து உள்ளார்கள். நம்முடைய கட்சி எளிய மக்களின் கட்சிதானே.
நம்முடைய கட்சி ஒன்றும் பண்ணையார்களின் கட்சி கிடையாதே. அந்த காலத்தில் பண்ணையார்கள்தான் பதவியில் இருப்பார்கள். இப்போ கொஞ்சம் உள்டா, பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாரா மாறிவிடுவிகிறார்கள்.
