தவெக 2ஆம் ஆண்டு விழா: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் மறுப்பு! நடந்தது என்ன?
தவெக சார்பில் GetOut என்ற பேனரில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்ட திணிப்பு, அரசியல் கோழைத் தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் ஆகியவற்றுக்கு எதிராக போராடட் உறுதியேற்போம் என்ற வாசகத்தின் கீழ் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில், பிரபல நாட்டுப்புற பாடகர் கிடாக்குழி மாரியம்மாளின் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.
தவெக 2ஆம் ஆண்டு விழா
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.
இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அன்று கட்சி மாநாட்டை விஜய் நடத்தினார். அப்போது பேசிய அவர், “பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. அரசியல் அண்ணன் தம்பி உறவை அறிமுகம் செய்த அறிஞர் அண்ணா சொன்னது போல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்கள் கொள்கை, பெரியாருக்கு பிறகு பச்சைத் தமிழன் பெருந்தலைவன் காமராஜர்தான் எங்கள் வழிகாட்டி, இந்திய அரசியல் சாசனத்தை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் பெயரை இந்தியாவில் கேட்டாலே ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தியவர்கள் நடுங்குவார்கள். மண்ணை கட்டியாண்ட பேரசி வேலுநாச்சியார், எங்கள் கொள்கை வழிகாட்டி, இந்த மண்ணுக்காக போராடிய புரட்சியாளர் அவர். அடுத்தாக இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் ஆகியோர் எங்கள் கொள்கை தலைவர்கள்” என விஜய் பேசி இருந்தார்.
