ஜானகியின் அலை.. புறந்தள்ளப்பட்ட ஜெயலலிதா குழு.. எம்.ஜி.ஆர் மறைவை உறுதிப்படுத்தி தகவல் சொன்ன டிடிவி தினகரன்.. எப்படி?
ஜானகியின் அலை.. புறந்தள்ளப்பட்ட ஜெயலலிதா குழு.. எம்.ஜி.ஆர் மறைவை உறுதிப்படுத்தி தகவல் சொன்ன டிடிவி தினகரன்.. எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் தனது 61ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியவை..
யார் இந்த டிடிவி தினகரன்?:
திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தரின் மகன் தினகரன் என்பதின் சுருக்கமே, டிடிவி தினகரன். இவர் 1963ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி விவேகானந்தர் மற்றும் வனிதா மணி ஆகிய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
வனிதா மணியின் இளைய சகோதரி தான், வி.கே.சசிகலா. ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவின் அடியொற்றி அரசியலுக்குள் நுழைந்தவர் தான், டிடிவி தினகரன்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் நாடாளுமன்றத்தொகுதியில் அதிமுக சார்பில் நின்று, 3 லட்சத்து 3ஆயிரத்து 881 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் கம்பம் செல்வந்திரனை தோற்கடித்தவர்.
பின் அதே தொகுதியில் 2004ஆம் ஆண்டு வெறும் 21ஆயிரத்து 155 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை சேர்ந்த ஜே.எம்.ஆருணுடன் வெற்றியை நழுவவிட்டவர்.இருப்பினும், இவர் பெற்ற வாக்குகள் 3 லட்சத்து 25ஆயிரத்து 696 ஆகும்.
அரசியலில் ரீ என்ட்ரி:
இந்த தோல்விக்குப் பின், அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் மீண்டும் அரசியல் களத்தில் பிஸியாக வேலை செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, தினகரன் அணி என பலவாறாக பிரிந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா ஆனார். ஆனால், அவரது துரதிர்ஷ்டம் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசெல்லும் சூழல் ஏற்பட அக்கட்சியை அதிமுக துணைப்பொதுச்செயலாளர் என்னும் பொறுப்பினை உருவாக்கி டிடிவி தினகரனிடம் விட்டுச்சென்றார், சசிகலா. ஆனால், ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுகூடி, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவையும் தினகரனையும் அக்கட்சியில் இருந்து நீக்கினர்.
பின் 2017ஆம் ஆண்டு, ஜெயலலிதா நின்று மறைந்த தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனை வீழ்த்தி, 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 89 ஆயிரத்து 13 வாக்குகள் வென்று, சுயேச்சையாக தமிழ்நாடு சட்ட்ப்பேரவைக்குச் சென்றவர், டிடிவி தினகரன்.
அடுத்து கடந்த 2024 நாடாளுமன்றத்தேர்தலில் தேனி தொகுதியில் நின்ற டிடிவி தினகரன், பெரியளவில் செலவு செய்யாமல் பாஜக கூட்டணியில் இணைந்து, 2,92,668 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார். இந்த தொகுதியில் அவரது முன்னாள் சிஷ்யன் தங்க தமிழ்ச்செல்வன், திமுகவில் நின்று வென்றார்.
அரசியலில் சாணக்யன் டிடிவி தினகரன்:
எம்.ஜி.ஆர். உடல்நிலை மோசமானபோது, ஜெயலலிதாவுக்கு முழு பாதுகாப்புக் கொடுத்தது, சசிகலாவின் குடும்பம். அக்காலகட்டத்தில் ஜானகி அம்மா, ஜெயலலிதாவை உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆரை வந்து பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை. அப்போது எம்.ஜி.ஆரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக ஒரு தகவல் பரவியுள்ளது. அவர் இறந்துவிட்டாரா என்பதைப் பரிசோதித்து உறுதிப்படுத்தி, அதை உடனடியாக சித்தி சசிகலா மற்றும் சித்தப்பா நடராஜனிடம் சொல்லும் பொறுப்பு டிடிவி தினகரன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்போது, டிடிவி தினகரன் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு, எப்படியும் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டால் கலைஞர் கருணாநிதிக்குத் தகவல் செல்லும். அவர் மரியாதை செலுத்த புறப்படுவார் என்பதை அறிந்து, கலைஞரின் கோபாலபுரத்தெருவில் யாரும் சந்தேகப்படாத நபர்போல் உலாவிக்கொண்டு இருந்திருக்கிறார். அதிகாலையில் கருணாநிதியின் வீட்டு வாசலில் விளக்கு எரிந்து, அவசர அவசரமாக கருணாநிதி வெளியில் பதற்றத்துடன் கிளம்பியிருக்கிறார். அதைப்பார்த்துவிட்டு, உடனடியாக சசிலாவுக்கு போன் செய்துவிட்டு, ஜெயலலிதாவை ராஜாஜி ஹாலுக்கு அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்தார், டிடிவி தினகரன்.
மேலும், ஜெயலலிதாவை அப்புறப்படுத்த ஜானகி அம்மாளின் தொண்டர்கள் ஊசியை வைத்து குத்தியபோது எல்லாம், அதை அரணாக நின்று தடுத்தவர், டிடிவி தினகரன். அன்று தொடங்கிய டிடிவி தினகரனின் சாணக்ய தந்திரம், ஆர்.கே. தொகுதியில் சுயேச்சையாக வென்றது, பல ஐ.டி.ரெய்டுகளை கூலாக கையாண்டது வரை தொடர்ந்தது.
பெரியகுளம் மக்களவைத்தொகுதி மக்களுக்கு அள்ளி இறைத்த டிடிவி தினகரன்:
டிடிவி தினகரன் பெரியகுளம் மக்களவைத்தொகுதியின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் உள்ளிட்டப் பல்வேறு கோயில்களுக்குத் திருப்பணி செய்தவர். ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி கேட்டு, அவரது அலுவலகத்துக்குச் சென்ற பெற்றோருக்கு மறுக்காமல் உதவியவர். அதனால் இன்றும் தேனி மற்றும் பெரியகுளம் பகுதியில் டிடிவி தினகரனுக்குச் செல்வாக்கு குறையவில்லை.
தனது 61ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் டிடிவி தினகரனை வாழ்த்துகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!