Tamil News  /  Tamilnadu  /  Trichy Surya Siva Suspended From Bjp For 6 Months
அண்ணாமலை, சூர்யா சிவா
அண்ணாமலை, சூர்யா சிவா (twitter)

Suriya Siva: பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்துக்கு சஸ்பெண்ட்- அண்ணாமலை

24 November 2022, 22:26 ISTKarthikeyan S
24 November 2022, 22:26 IST

சென்னை: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா, பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்துக்கு நீக்கப்படுகிறார் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபோது அவரை சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதில், " தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை. சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு. முன் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகிய இருவரும். ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர, சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர். நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும்.

பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம். பெண்களை பொது மேடைகளில் கொச்சை படுத்துபவர்கள். ஆபாச காணொளியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதுப் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமுகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும். என்பதே என் விருப்பம் ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது (Burden of Leadership).

ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் செயல்களில் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும்." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

டாபிக்ஸ்