தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்

Trichy Surya: ’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்

Kathiravan V HT Tamil
Jun 23, 2024 01:14 PM IST

Trichy Surya: கட்சி பதவியில் இருந்து நீக்கிய கோபத்தில் குற்றம்சாட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையாக என்னிடம் பட்டியல் உள்ளது மத்திய அமைச்சர் முதல் மாநிலத் தலைவர், மாநில அமைப்பு பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர் வரை யாருக்கு எவ்வளவு போனது என என்னால் சொல்ல முடியும் என திருச்சி சூர்யா விளக்கம்.

’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்
’பாஜக தலைவர் முதல் மத்திய அமைச்சர் வரை மணல் வியாபாரிகளிடம் பணம் பெற்றார்களா?’ திருச்சி சூர்யா பகீர் புகார்

ட்ரெண்டிங் செய்திகள்

பாஜக தலைமை உடன் உரசல் 

பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா, கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

”ஆட்டையை போடும் பாஜக பிரமூகர்கள்”  - சூர்யா ட்வீட்

இந்த நிலையில் அவரது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில், “திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு , மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே..” என ட்வீட் செய்து இருந்தார்.

என்னிடம் ஆதாரம் உள்ளது - திருச்சி சூர்யா

இது குறித்து திருச்சி சூர்யா சிவாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, கட்சி பதவியில் இருந்து நீக்கிய கோபத்தில் குற்றம்சாட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையாக என்னிடம் பட்டியல் உள்ளது மத்திய அமைச்சர் முதல் மாநிலத் தலைவர், மாநில அமைப்பு பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர் வரை யாருக்கு எவ்வளவு போனது என என்னால் சொல்ல முடியும். பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு, 30 முதல் 80 கோடி வரை நிதி கொடுக்கப்பட்டது. அதற்கான பேங்க் ஸ்டேட்மண்ட் வரை உள்ளது.

மணல் விற்பனை செய்யும் எஸ்.ஆர்., கரிகாலன் ஆகியோர் என் உறவினர்கள் என்பது ஊர் அறிந்தது, அவர்கள் மூலம் யாருக்கு பணம் கொடுத்துள்ளார்கள் என்ற பட்டியல் உள்ளது. நேரம் வரும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பட்டியலை வெளியிடுவேன்.

தவறே செய்யாத என் மீது நடவடிக்கை எடுத்த கட்சி நிர்வாகிகளின் உண்மை முகத்தை வெளிக்காட்ட வேண்டியது என் தலையாக கடமை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணல் குவாரிகள் தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் கமலாயத்தில் இருக்கும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததும், அந்த விசாரணை நிறுத்தப்பட்டது என கூறி உள்ளார்.

திருச்சி சூர்யா நீக்கம் -  நடந்தது என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.

அண்ணாமலையை விமர்சித்த தமிழிசை

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அதிமுக உடன் கூட்டணி வைத்து இருந்தால், திமுகவுக்கு இத்தனை இடங்கள் கிடைத்து இருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை. அதிமுக, பாஜக கூட்டணி எடுத்த வாக்குகளை கூட்டினால் திமுகவை விட அதிகமாக வந்து இருக்கும்.

கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம்தான், முழுமையாக கூட்டணியை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து அல்ல, தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து அகில பாரத தலைமைதான் முடிவு எடுக்க முடியும் என கூறி இருந்தார்.

மேலும், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த தமிழிசை சவுந்தராஜன், “நான் கட்சியில் இருக்கும் போது சில அளவுகோலை வைத்து இருந்தேன். சமூகவிரோதிகள் போல் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கமாட்டேன். சமீபகாலத்தில் சமூகத்தில் நிறைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதை தவிர்த்து கட்சியில் கடுமையாக உழைக்க கூடிய தொண்டர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்” என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்துகளுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில்ட்வீட் செய்து இருந்த அவர்,

ஊடகங்களில் பதிவிடுவது சரியா?

தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா?

குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

நீங்கள் இருந்தபோது கட்சியில் சேர ஆட்கள் வரவில்லை

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.

அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?

பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?

நடவடிக்கைகளை சந்திக்க தயார்

இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம் என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யாவை விடுவிப்பதாக பாஜக தலைமை அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.