Seeman Vs Varunkumar IPS: திருச்சி SP வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்த புகார்..சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு
Seeman Vs Varunkumar IPS: திருச்சி SP வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Seeman Vs Varunkumar IPS: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் திருச்சி எஸ்.பி.தான் என்று சீமான் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் அந்த கூட்டத்தில் தமிழக காவல்துறை குறித்தும் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இதனிடையே, தமிழக காவல்துறையை பொது மேடையில் அவதூறாக பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆபாச பாடல் பாடி கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணன், திருப்பதி ஆகியோரை திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்து அவதூறாகப் பதிவு செய்ய சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் தூண்டிவிட்டதாக திருச்சி தில்லை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி எஸ்.பி. வருண்குமார் வெளியிட்ட சமூக வலைதளபதிவில், “நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவருடைய அனைத்து தவறான கருத்துகளுக்காக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பொதுமேடையில் சீமான் பேசும் அற்பமான பொய் புனை சுருட்டுகளைப் பொதுமக்கள் கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.
சீமான் குற்றச்சாட்டு
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள வருண் ஐபிஎஸை குற்றம்சாட்டி இருந்தார். அதில் “ஒரு அதிகாரியை எஸ்.பியாக வைத்துள்ளீர்கள் வருண்ணு, அவரு எங்கள் ஊரை சேர்ந்தவர். தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தேவர், நாடார், கோனார், தேவேந்திரர்கள் என யாரையுமே அவருக்கு பிடிக்கவில்லை. எங்கள் மீது பிறப்பு வெறுப்பு அவருக்கு உள்ளது. ஏற்கெனவே துரைமுருகனை சென்னைக்கு வர சொல்லி குண்டாஸில் போட்டது வருண் ஐபிஎஸ்தான். இப்போதும் சாட்டை துரைமுருகனை கைது செய்து திருச்சிக்கு கொண்டு வருவதும் வருண் ஐபிஎஸ்தான். இதையெல்லாம் மறந்துவிடுவோமா?. சர்வேசனும், நீங்களும் ஐபிஎஸ் படிக்கும்போது ஒரே பேட்ஜ் மெட்டாக இருந்தீர்கள். ரத்தீஷ் அவருடைய தம்பியாக உள்ளார். மேலிட அழுத்தம் என்று கூறுகிறீர்கள். எத்தனை நாட்களுக்கு நீங்கள் மேலிடத்தில் இருப்பீர்கள். தேவர், நாடார்,கோனார் என தொடர்ந்து வன்மத்துடன் உள்ளர். என்னை ஏன் கைது செய்யவில்லை. ” என சீமான் கூறி இருந்தார்.
வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் குற்றச்சாட்டு குறித்து யார் பெயரையும் குறிப்பிடாமல், ’பாரதியாரின் சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற கவிதையை சுட்டிக்காட்டி வருண் குமார் ஐபிஎஸ் பதில் அளித்து உள்ளார்.
சாட்டை துரைமுருகன் பேசியது என்ன?
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசுகையில், “திமுகவிடம் திமிர்தனம் உள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘நாய்லாம் பி.ஏ பட்டம் வாங்குகின்றது’ என சொல்கிறார். மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி கூட பி.ஏ.தான் படித்து உள்ளார். யாரை பார்த்து நாய் என சொல்கிறீர்கள். ஜோதிராவ் பூலே போட்ட வழியில் டிக்டாக், டப் ஸ்மேஷ் செய்தவர்கள்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரெல்லாம். ஊரான் பிள்ளைக்கு ஏன் இனிஷியல் போடுகின்றீர்கள் என கூறி இருந்தார்.
டாபிக்ஸ்