‘வன்மத்தை திணிப்பதே முக்கியப் பணி.. முதன்மையானவர்.. மூத்தவர்’ கே.என்.நேருவை மறைமுக சாடிய திமுக எம்.எல்.ஏ!
‘நான் ஒரு சுயமரியாதை காரன், நான் யாரையும் நீ ஏன் போய் அவரை பார்த்தாய், நீ ஏன் போய் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாய், என்று இன்றுவரை யாரையும் எப்பொழுதும் கேட்டதில்லை’

திருச்சி திமுகவில், எப்போதும் உட்கட்சி பூசல் இல்லாத நாளில்லை போலும். அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் இடையே தான் மோதல் இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டு கேள்விப்பட்டிருப்போம். இப்போது பார்த்தால், திருச்சி லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியனுக்கு, கே.என்.நேருவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருவது, செளந்தரபாண்டியனின் பேஸ்புக் பதிவு மூலம் வெளிச்சத்து வந்துள்ளது. இதோ இன்று செளந்தரபாண்டியன் வெளியிட்ட இரு பேஸ்புக் பதிவுகள், அதை உறுதி செய்கின்றன.
செளந்தரபாண்டியனின் முதல் பேஸ்புக் பதிவு
‘திருச்சி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று யாரும் என்னுடன் பேசக்கூடாது, தொடர்பு கொள்ள கூடாது என்று அதிகாரம் செலுத்தி வந்தவர், இப்போது வெளி மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தில், ‘சௌந்தரபாண்டியன் கிட்ட பேசுறியா..’ என்றும், இன்னும் ஒரு படி மேலே சென்று அமைச்சர்கள் இடத்தில் கூட. ‘உங்களை சௌந்தரபாண்டியன் வந்து பார்த்தானா’ என்று விசாரிக்கின்றாராம், முதன்மையானவர், மூத்தவர்! கட்சிக்காரர்கள் இடத்தில் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ‘சௌந்தரபாண்டியனுக்கு பத்திரிக்கை வச்சியா?’ அப்படின்னு விசாரிக்கிறது இதுதான் இப்ப இவருக்கு முக்கியமான வேலைகள்.
நாங்கள் என்ன வேலுமணி, தங்கமணி என்றும் கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் உடனுமா தொடர்பில் உள்ளோம். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இப்போது நடந்த தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கூட மாண்புமிகு தலைவர் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியும், எங்கள் மீது வன்மத்தை தினம் தினம் திணிப்பதே இவரின் முக்கியமான பணியாக உள்ளது,’ என்று அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் குறிப்பிடாமல், மறைமுகமாக அவரை சாடி பதிவை வெளியிட்டார்.