Trichy Bus Accident: மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து.. பற்றி எரிந்த தீ! 15 பேர் படுகாயம்
Trichy Bus Accident: திருச்சி அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளத்தில் பாய்ந்த தனியார் ஆம்னி பேருந்து, மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கும் நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற இந்த ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயமைடந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.
சுமார் 40 பயணிகளுடன் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, திருச்சி - மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே யாகபுரம் பகுதியை பயணித்தது. அங்கே சாலை மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியே சென்று நெடுஞ்சாலைக்கு திரும்ப வேண்டும்.
மின் கம்பத்தில் மோதி தீ விபத்து
இதையடுத்து சர்வீஸ் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனாது.
மின் கம்பத்தில் மோதியதால் திடீரென தீப்பற்றிய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அலறியடித்து கொண்டு வெளியேறினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்க உதவினர்.
இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பயணிகளை மீட்டு தீ பற்றி எரிந்துகொண்டிருந்த பேருந்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
15 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காயமடைந்த பயணிகளை அக்கம் பக்கத்தினரும், போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 15 பேர் படுகாயமடைந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு பேருந்தில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானாது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீண்டும் கார் விபத்து
பேருந்து விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் ஒரு கார் விபத்துக்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்து நடைபெற்றிருக்கும் நிலையில், இந்த பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக, பைப்பாஸ் பிரிவு சாலையில் பாலம் வேலை நடைபெறுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதை கவனித்த ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்து இடதுபுறம் செல்ல முயன்றதாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சுமார் 30 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்ததாக சொல்லப்படும் நிலையில், அதில் இருந்த பயணிகள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பிதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்