Bike Taxi: ’தமிழ்நாட்டில் பைக் டேக்ஸிகளுக்கு கட்டுப்பாடு ஏன்?’ போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்!
பைக் டாக்ஸி ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு தரும் சூழலும் உள்ளது. இன்னொரு புறம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆபத்தாக உணர்கிறார்கள் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

வணிக நோக்கத்திற்காக பைக் டாக்ஸி பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இதில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பைக் டாக்ஸி விவகாரத்தில் நாம் மட்டும் முடிவேடுக்க முடியாது. இதில் ஒன்றிய அரசும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். பைக் டாக்ஸிகளை வாடகை ரீதியாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி தந்து உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
நாம் இது குறித்து ஆய்வு செய்ய உயர் அலுவலகர்களை கொண்டு குழு அமைத்து உள்ளோம். தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி ஆனது கடந்த ஆட்சி காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் அந்த பணியை கையில் எடுத்துள்ளோம். வாடகை அல்லாத வாகனங்களில், ஒருவர் வாடகைக்கு பயணம் செய்வதை சட்டரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் ஏதேனும் ஒரு சிறு விபத்து ஏற்பட்டாலும் அதற்கான நிவாரணம் தேடும் போது நீதிமன்றம் அதை மறுக்கும் வாய்ப்பு உண்டு. எனவே இதை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம்.