Tourism Award : நீங்கள் சுற்றுலா ஏற்பாட்டாளரா? வாங்கிக்கோங்க விருது! – விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் வழங்கப்படும் விருதுகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு –
தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 27ம் தேதி சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டின், தமிழ்நாடு மற்றும் சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சுற்றுலா அமைப்பாளர், தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட 17 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
விருதுகளுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கு சுற்றுலா துறையின் முன்னோடிகள் மதிப்பீட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத் துறையால் அறிவிக் கப்படும் இடத்தில் நடைபெறும் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் செப்.27-ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும்.
விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு செய்தியையும் தெரிந்துகொள்ளுங்கள்
பிஎஸ்என்எல் சொத்துகள் ஏலம் விண்ணப்பிக்கலாம் ஆக.17 கடைசி
மின்னணு முறையில் ஏலமிடப்படவுள்ள பிஎஸ்என்எல் நிலம் மற்றும் கட்டிட சொத்துகளை வாங்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது –
பிஎஸ்என்எல் நிர்வாகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஐந்து பகுதிகளிலுள்ள நிலம் மற்றும் கட்டிட சொத்துகளை மின் ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள 4,047 ச.மீ. பரப்பிலான டின்ரோஸ் தொலைபேசி தொடர்பகம், உடுமலைப்பேட்டையில் உள்ள 4,267 ச.மீ. பரப்பிலான தொலைபேசி தொடர்பகம் மற்றும் எஸ்கியூ வளாகம், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள 2,929 ச.மீ. பரப்பிலான மைக்ரோவேவ் கட்டிட வளாகம், விழுப்புரத்தில் உள்ள 2,396 ச.மீ. பரப்பிலான டி.டி.ஓ. வளாகம், புதுச்சேரியில் உள்ள 2,237 ச.மீ. பரப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் விற்பனைக்கான ஏலத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதை ஏலம் எடுக்க விரும்பும் ஆர்வமுள்ள ஏலதாரர்கள் எம்எஸ்டிசியின் https://www.hstcecommerce.com/auctionhome/propertysale/index.jsp எனும் இணையதளத்திலும், ஆர்.எஃப்.பி. மற்றும் பிற ஆவணங்கள் குறித்த தகவல்களை பி.எஸ்.என்.எல்ன் https://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/virtual_dataroom எனும் இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைன் ஏலத்துக்கான விண்ணப்பத்தை ஆகஸ்ட் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.