TOP 10 NEWS: ’விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு! தமிழகம் வரும் ஜெயலலிதா நகைகள்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு, ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு, திமுக அரசு மீது ஈபிஎஸ் விமர்சனம், திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ:-
1.விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு தமிழ்நாட்டிற்குள் மட்டும் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2.ஜெயலலிதாவின் நகைகள் ஒப்படைப்பு
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர நகைகள் தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி 1000 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.
3.திமுக மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு
அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம், ஈரோடு, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, நெல்லை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை திமுக அறிவித்து உள்ளது.
4.துரோகிகளே தோல்விக்கு காரணம்
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு துரோகிகள்தான் காரணம். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக உள்ளேன். 2026 தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
5.மக்களுக்கே காவல்துறையினர் சேவை செய்ய வேண்டும்
பொதுமக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொதுமக்களுதான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்த கூடாது. காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
6.முதலமைச்சர் மீது ஆளுநர் விமர்சனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடக பக்கம் மூலம் ஆளுநருக்கு எதிராக மக்களை தவறகாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துகளை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்க பயன்படுத்தி இருப்பது பரிதாபத்திற்கு உரியது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து.
7.தமிழக அமைச்சரவை மாற்றம்
பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை, வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
8.கவுன்சிலர் கணவருக்கு அரிவாள் வெட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு திமுக கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவர் கோவிந்தனை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு.
9.சீமான் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜய லட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார்.
10.திமுக ஆட்சி - ஈபிஎஸ் கருத்து
திமுக ஆட்சி முடிவுக்கு வந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதே, தமிழ்நாட்டு மீண்டும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாறுவதற்கு ஒரே வழி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து.
