Top 10 News : ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன்.. 10 மாவட்டங்களில் நாளை கனமழை.. நாளை சிறப்பு ரயில் இயக்கம்!
ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன், 10 மாவட்டங்களில் நாளை கனமழை, ராமநாதபுரம் –தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் என இன்றைய முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஒரே மேடையில் விஜய்-திருமாவளாவன்!
விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் இருவரும் ஒரே நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளை ஒட்டி சென்னையில் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட உள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி
உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிற்பகல் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர். அனுமதியின்றி மின்வேலி அமைத்த கிளியானந்தன் என்பவரை கைது செய்து திருநாவலூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றால அருவியில் குளிக்க அனுமதி
குற்றால அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் –தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் வசதிக்காக ராமநாதபுரம் –தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமநாதபுரத்தில் நாளை மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.40-க்கு தாம்பரம் வந்தடையும். பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்து காப்புக் கட்டிக்கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
டாபிக்ஸ்