TOP 10 NEWS: ’பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி! பொங்கல் பரிசு பெற இன்றே கடைசிநாள்!' டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு பரிசீலனை தொடக்கம், பொங்கல் பரிசுத் தொகை பெற இன்றே கடைநாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 19) காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.ஈரோடு கிழக்கில் வேட்புமனு பரிசீலனை!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் திமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
2.விஜய் பரந்தூர் செல்ல அனுமதி!
வரும் ஜனவரி 20ஆம் தேதி அன்று பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்து உள்ளது.
3.சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதியான இன்று 3412 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகள் உடன் கூடுதலாக 1320 பேருந்துகள் இயக்கம்.
4.பொங்கல் பரிசு பெற இன்றே கடைசி!
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்றே கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5.டைடல் பூங்கா அமைக்க அனுமதி!
மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
6.30 நூல்களை வெளியிடும் ஸ்டாலின்!
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
7.சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பயணிகள் சென்னை திரும்புவதால், இன்று மற்றும் நாளை வெளியூர்களிலிருந்து சென்னைக்கு அதிக போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி பஸ்கள் இயங்க போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி ரோட்டில் போக்குவரத்தை விரைவுபடுத்த, ஓம்னி பஸ்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
8.87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்!
போகி பண்டிகை முடிந்த நிலையில் சென்னை மாநகர் முழுவதும் 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
9.சாலை விபத்தில் யூடியூபர் உயிரிழப்பு
ஈரோட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி சாலை விபத்தில் உயிரிழந்தார். கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்பு மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
10.விஜய் பேச்சுக்கு அதிமுக வரவேற்பு
“புதிதாக கட்சி தொடங்கிய விஜய் போன்றோரும் திமுகவை விமர்சிப்பது அதிமுகவுக்கு பலம்தான். விஜயின் நிதானத்தை பார்க்கின்ற போது, பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிகின்றார்” என முன்னாள் அதிமுக அமைச்சர் K.T. ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.
