TOP 10 NEWS: ’2ஆம் ஆண்டில் தவெக! தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
வழக்கம் போல் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தவெக, கட்சித் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்
முகூர்த்த நாளையொட்டி தமிழகத்தில் இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை நாளான இன்று ஆவணப்பதிவு அலுவலங்கள் செயல்படுகின்றன. இன்று பணியாற்றூம் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு வேறொரு நாளில் மாற்று விடுப்பு தரப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2.தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
இரட்டை போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்; வாகைப்பூ மாலை சூடுவோம். இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை கடந்திருப்போம்; எதிற்கும் அஞ்சாமல் நேர்மையாக நடைபோடுகிறோம் என தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்.
3.தலைவர்கள் சிலைகளை திறந்து வைக்கும் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளையொட்டி பனையூரில் இன்று அக்கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுகிறார். மேலும் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாளின் சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
4.மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 479 கன அடியில் இருந்து 491 கன அடியாக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
5.மதுபோதையில் சாலை விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் போதை விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மூவர் மீது பொதுமக்கள் தாக்குதல்.
6.அதிமுக பிரமுகர் கைது
மெரினா நொச்சி நகரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக பகுதி துணைச் செயலாளர் காசிநாதன் கைது செய்யப்பட்டார்.
7.அலட்சியம் காட்டிய காவல் ஆய்வாளர் மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லை சோதனைச் சாவடிகளில், கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பரிசோதிப்பதில் அலட்சியம் காட்டிய புகாரில், அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.
8.இடஒதுக்கீடு தந்தால் திமுக உடன் கூட்டணி
வன்னியர் சமூக மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றினால் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைமை மறுபரிசீலனை செய்யும் என மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் பேட்டி.
9.காவலர் சன்னி லாய்டுக்கு சிறை
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கௌஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
10.தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு.
