தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published Apr 29, 2025 09:44 AM IST

சட்டப்பேரவை இன்றுடன் நிறைவு, சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம், பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாட்டம், கூவாகம் திருவிழா தொடக்கம், மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1.சட்டப்பேரவை - இன்று இறுதி நாள்

சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

2.அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், அரசு பணியாளர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பண்டிகை கால முன்பணம் மற்றும் கல்வி முன்பணம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் எனவும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதத்தில் முன்கூட்டியே தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

3.முதல்வர்-ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்களால் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அவர் விமர்சித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் அறிக்கையை சுட்டிக்காட்டி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் குறைவு என விளக்கமளித்தார். மேலும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் அதிகளவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

4.கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறி வைப்பது ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காவல் துறையைப் பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சமில்லாத சூழல் நிலவுவதாகவும், வெளி மாநில கொள்ளையர்கள் சென்னையை தேர்ந்தெடுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால் கொள்ளையர்கள் இங்கு வருவதாக விளக்கினார்.

5.மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மனோ தங்கராஜுக்கு மீண்டும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டது.

6.77 மாவட்ட நீதிபதிகள் பணியிடமாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உட்பட 77 மாவட்ட நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்தார்.

7.மெட்ரோ சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. நான்காவது வழித்தடத்தில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

8.தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்

தமிழ்நாட்டில் மே மாதம் 2-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில், அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 99 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

9.தமிழ்வார விழா கொண்டாட்டம்

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி இன்று முதல் தமிழ் வார விழா கொண்டாடப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி இன்று முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது.

10.கூவாகம் திருவிழா தொடக்கம்

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் 18 நாள் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.