Top 10 News : கோலகலமாக தொடங்கிய சதய விழா.. தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட டாப் 10 செய்திகள்
தஞ்சை பெரிய கோயிலில் சதய விழா தொடக்கம், தமிழக முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் உள்ளிட்ட இன்றைய காலை டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
தஞ்சை பெரிய கோயிலில் சதய விழா தொடக்கம், தமிழக முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் உள்ளிட்ட இன்றைய காலை டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
கோலகலமாக தொடங்கியது சதய விழா
தஞ்சையில் 1,039வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் சதய விழா 2 நாட்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை நாட்டியாஞ்சலி நடைபெற உள்ளது.
வெம்பக்கோட்டையில் தங்க மணி கண்டெடுப்பு
விருதுநகர் மாட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராமம் எடையில் உள்ள தங்கமணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்திற்கு ஏலம் போன ஒரு தேங்காய்
தேனி மாவட்டம் போடியில் உள்ள பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் யாக பூஜையில் கும்ப கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காயை முருகேசன் என்பவர் ரூ. 3,03,000க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். ஆண்டுதோறும் பூஜை முடிவில் தேங்காயை ஏலம் விடும் வழக்கம் உள்ளது. கடந்த ஆண்டு ரூ.65,000க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கின
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கோவை செல்வராஜ் மறைவு - முதல்வர் இரங்கல்
திமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கோவை செல்வராஜ் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன். திமுகவில் இணைந்து கட்சியின் கொள்கைளை விவாத மேடைகளில் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். தன் மகனின் திருமணத்தை முடித்து மண மக்களுடன் சென்னை வந்து என்னை சந்தித்து வாழ்த்து பெறுவதாக கூறினார். செல்வராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆறுதல் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இன்று கோவையில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் ரசீது போட பயிற்சி
டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தடுக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 84 டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு மது பாட்டில்களை ரசீது போட்டு விற்பனை செய்ய இன்று முதல் 2 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து- இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி
சேலம் சங்ககிரி அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை 92.34 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்