TOP 10 NEWS: ’தமிழ்நாடு அலங்கார ஊர்த்தி புறக்கணிப்பா? ஐ.டி.ஊழியரிடம் துப்பாக்கி பறிமுதல்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: குடியரசு தினத்தில் தமிழ்நாடு அரசின் ஊர்த்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வதந்தி, சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் போராட்டம், ஐ.டி.ஊழியரிடம் துப்பாக்கி பறிமுதல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தமிழ்நாடு அரசின் ஊர்த்திகள் புறக்கணிப்பா?
2025ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்த்தி நிராகரிப்பு என்று பரப்பப்படுவது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2.சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு
கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இன்று (டிச.23) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பிலும் இன்று போராட்டம் நடைபெறுகின்றது.
3.விடுதலை-2 படம் பார்த்த திருமா பேட்டி
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்க முடியும். போராளிகளை உருவாக்க முடியாது. யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை. கோட்பாடு இல்லாத தனிநபர்கள் அவர்களை பின்பற்றக்கூடியவர்களை போராளியாக வளர்த்தெடுக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
4.ஐ.டி.ஊழியரிடம் துப்பாக்கி பறிமுதல்
கோவையை சேர்ந்த ஐடி ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக பீகாரில் இருந்து வாங்கிவரப்பட்ட கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 குண்டுகளை பறிமுதல் செய்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த விவகாரத்தில் குந்தன் ராஜ், ஹரிஷ், மணிகண்ட பிரபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை.
5.அமித்ஷா மீது அமைச்சர் விமர்சனம்
"அமித் ஷாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆயிரம் முறை அல்ல.. ஓராயிரம் முறை அம்பேத்கர், பெரியார் பெயரை சொல்வோம். இது திராவிட பூமி" என ஒரத்தநாட்டில் நடந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 92வது பிறந்தநாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேச்சு.
6.கோயம்பேட்டில் பூண்டு விலை சரிவு
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயம், தக்காளி, பூண்டு விலை குறைந்து உள்ளது. கடந்த வாரத்தில் வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், தக்காளி ரூ.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மொத்த வியாபாரத்தில் வெங்காயம் கிலோ ரூ.50க்கும், தக்காளி ரூ.20க்கும், பூண்டு ரூ.350க்கும் விற்பனையாகின்றன. பூண்டு விலை ரூ.50 வரை குறைந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விலையில் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
7.சிவகங்கையில் கொள்ளையர்கள் கைது
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி காமதேனு நகரில் பூட்டப்பட்டு இருந்த 6 சவரன் தங்கம் மற்றும் 1.70 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிய ராம்குமார் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர்.
8.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு.
9.அகற்றப்படும் மருத்துவக் கழிவுகள்
நெல்லையில் இருந்து மருத்துவக் கழிவுகள் 18 லாரிகளில் மருத்துவக் கழிவுகளை எடுத்து சென்றுள்ள நிலையில், எஞ்சிய கழிவுகளும் இன்று நண்பகலுக்குள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
10.ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை
அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிச.27, 28 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவங்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.