TOP 10 NEWS: ’3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட், வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி, வைக்கம் பெரியார் நினைவகத்தை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியாரை புகழ்ந்த பினராயி விஜயன், திமுகவை சாடும் ராமதாஸ் உள்ளிட்ட பிற்பகல் டாப் 10 செய்திகள் இதோ!
1.3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, சென்னை, காவிரி படுகை மாவட்டங்களில் மிக கனமழைகான ஆரஞ்சு அலார்ட்டும் விடுப்பு.
2.தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
3.குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
தொடர் கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு.
4.பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு
சென்னையில் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
5.வைக்கத்தில் முதலமைச்சர் பேச்சு
வைக்கத்தில் பெரியார் நினைவகம், நூலகம் திறந்து வைக்கப்பட்ட இந்நாள் வரலாற்றில் பொன்னாள். சமூக அரசியல் போராட்டத்தின் வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்து உள்ளது என கேரளாவில் உள்ள வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
6.பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்
"சமூக நீதியை உயர்த்திப் பிடித்ததில் மிக முக்கியமானவர் பெரியார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் சமூக நீதி காவலராக இருந்தார். 1931-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பெரியாரின் குடியரசு இதழில் கட்டுரை எழுதப்பட்டது, அதனால்தான் அந்த அறிக்கை தமிழ்நாட்டில் பிரபலமடைந்தது. சமூக நீதி ஆட்சியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை" என வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.
7.நயன்தாராவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுசு தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடைக்கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆவணப்படத்தில் தனது அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ பட காட்சிகள் படத்திற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட் ஃபிளிஸ் நிறுவனம் பதில் தர உத்தரவு.
8.சட்டப்பேரவை தொடர் குறித்து விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. விடுதலைக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேதனை.
9.கடலூர் மக்களுக்கு துரோகம்!
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன்; அவ்வாறு அமைக்கும் நிலை வந்தால் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்திருக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்தது சரியானது தான். ஆனால், கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சி சுரங்கத்திற்கு எதிராக இதே உணர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும், இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.
10.வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகின்றது. காலையில் 713 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3900 கன அடியாக உயர்ந்து உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21.5 அடியை எட்டிய நிலையில் 22 அடியை எட்டிய பின்னர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
டாபிக்ஸ்