TOP 10 NEWS: அண்ணா பல்கலை.யில் வன்கொடுமை! வேலு நாச்சியாருக்கு விஜய் புகழாரம்! டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், வேலுநாச்சியாருக்கு விஜய் புகழாரம், வாஜ்பாய்க்கு முதலமைச்சர் புகழாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.அண்ணா பல்கலை.கலையில் பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 20 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பணியில் இருந்த காவலாளிகள் கட்டுமான பணியில் இருந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2.அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
3.அண்ணாமலை கண்டனம்
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்.
4.அதிமுக ஐடி விங்கிற்கு புதிய தலைவர்
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கோவை சத்யனை நியனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். ஏற்கெனவே தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக இருந்த சிங்கை ராமச்சந்திரன் மாணவரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
5.வாஜ்பாய்க்கு முதலமைச்சர் புகழாரம்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்100வது பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!” என பதிவிட்டு உள்ளார்.
6.வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இன்று காலை வரை தமிழ்நாட்டில் இயல்பை விட 33% கூடுதலாகவும், சென்னையில் இயல்பை விட 30% கூடுதலாகவும் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
7.லாட்டரி விற்றவர்கள் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைச் செய்துவந்த 3 பேர் கைது. ஆரோக்கியசாமி (50), சுரேஷ் (42), ரூபன் (45) ஆகிய 3 பேரிடம் இருந்து லாட்டரி சீடுகளின் எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
8.வேலுநாச்சியாருக்கு விஜய் புகழாரம்
மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
9.ராமதாஸுக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி
கூட்டணிக் கட்சியிடம் பிளஸ் 1 என்ற மாநிலங்களவை சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பார்கள். ஒன்றிய அமைச்சர் பதவி என்றாலும் அனைத்தையும் தன் மகன் அன்புமணிக்குதான் வாங்கி கொடுப்பாரா ராமதாஸ்? இதுதான் ராமதாஸின் வன்னியர் பாசமா என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி.
10.விஜயை சந்தித்த சங்கமித்ரா அன்புமணி
சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பில் உருவாகி உள்ள ’அலங்கு’ படத்தின் குழுவினர் நடிகரும், தவெக தலைவருமான விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.