TOP 10 NEWS: ’தேசியக் கொடியேற்றிய ஆளுநர்! தேநீர் விருந்தை புறக்கணித்த விஜய்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: சென்னையில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர், தமிழக அரசு மீது ஆளுநர் விமர்சனம், மத்திய அரசு மீது முதலமைச்சர் விமர்சனம், பத்ம விருதுகள் அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் (ஜனவரி 26) வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்
76ஆவது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு.
2.பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர்
சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை 5 பேருக்கும் வீரதீரச் செயலுக்கான ‘அண்ணா பதக்கம்’ தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3.முதல்வர் மீது அண்ணாமலை விமர்சனம்
வேங்கைவயல் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் வரை மக்கள் சந்தித்த பல்வேறு பிரச்னைகளின்போது, அங்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறவில்லை. விவசாயிகள் நலனுக்காக பிரதமர் மோடி, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாக முதலமைச்சர் கிளம்பி செல்கிறார் என்றால் ‘டிராமா மாடல்’ அரசு எதற்கு முன்னுரிமை தருகிறது என்பது தெளிவாகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
4.ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது. ஏற்கெனவே நேற்றைய தினம் 18 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
5.சரிவு பாதையில் தமிழகம்
தமிழகம் சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் வளர வேண்டும் என்றால் இளைஞர்களுக்கு சிறப்பான கல்வி வேண்டும். தமிழக பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.
6.மத்திய அரசு மீது ஸ்டாலின் விமர்சனம்
இந்தி திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்கிறது. இந்தியை அல்ல எத்தனை மொழிகளை திணித்தாலும் தமிழ் அழிந்து போகாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
7.தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ விருது
தமிழ்நாட்டை சேர்ந்த சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, எழுத்தாளர் சினி.விஸ்வநாதன், ஹட்சன் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகன், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், அறிவுசார் அமைப்புகள் வழிகாட்டி பேராசிரியர் எம்.டி.ஸ்ரீனிவாஸ், சமையல் கலைஞர் செஃப் தாமோதரன், மிருதங்க கலைஞர் குருவாயூர் துரை, நல்லி குப்புசாமி, பத்திரிகையாளர் லஷ்மிபதி ராமசுப்பையர், கிரிக்கெட் வீரர் அஸ்வின், பறையிசை கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
8.அஜித்குமாருக்கு பத்மவிபூசன் விருது
திரைப்பட நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சோபனா, நடிகர் அஜித்குமார் ஆகியோருக்கு பத்மவிபூசன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
9.ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று நடத்தும் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
10.ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த விஜய்
ஆளுநர் தரும் தேநீர் விருந்து நிகழ்வுக்கு தவெக தலைவர் விஜய் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் அதை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாபிக்ஸ்