TOP 10 NEWS: ’7வது முறையாக திமுக ஆட்சி! திமுக செயற்குழுவில் அமித்ஷாவுக்கு கண்டனம்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: திமுக செயற்குழுவில் அமித்ஷாவுக்கு கண்டனம், 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்டாலின் பேச்சு, இஸ்லாமியர்கள் தொடர்பாக சீமான் கருத்து, ஈபிஎஸ் மீது டிடிவி விமர்சனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.திமுக ஆட்சி அமைய வேண்டும்
தமிழ்நாட்டில் 7ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
2.200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வேண்டும்
“நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது.. 2026ல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி” திமுக செயற்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு.
3.தமிழ்நாட்டில் உயரும் ஸ்டார்ட் அப்
தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 4 மடங்காக உயர்ந்து 10,005 ஆக உள்ளது. இதில் 4925 நிறுவனங்கள் பெண்களின் தலைமையில் இயங்குகின்றன என தமிழக அரசு தகவல்.
4.ஈபிஎஸ் வேறு உலகத்தில் வாழ்கிறார்
“ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதாலேயே, அவரைப் போலவே தன்னை நினைத்து ஈபிஎஸ் வேறு உலகத்தில் வாழ்கிறார்” என திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.
5.கட்டண நிலுவை குறித்து விளக்கம்
தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலக்த்திலும், இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை 2,151 கோடியை ஒன்றிய அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும், மாநில நிதியில் இருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில்.
6.சுற்றுசூழல் அனுமதி கோரும் டாடா நிறுவனம்
ராணிப்பேட்டை பணப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனம் அமைக்கும் கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பம் அளித்து உள்ளது. கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலைக்கான அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
7.அமித்ஷாவுக்கு எதிராக தீர்மானம்
திமுக செயற்குழுவில், அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றம்.
8.யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுக!
பொங்கல் விழா நாட்களில் அறிவிக்கப்பட்ட தேசிய தேர்வு முகமையின் ‘யுஜிசி - நெட்’ தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
9.மின் விபத்து இழப்பீடு உயர்வு
பொது இடங்களில் மின் விபத்துக்களால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
10.இஸ்லாமியர்கள் குறித்து சீமான் பேச்சு
இஸ்லாமியர்கள் தங்களின் ஆறாவது கடமையாக திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
டாபிக்ஸ்