Top 10 News: முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர்.. ஆளுநர் ரவி ஒப்புதல்.. தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்!
Top 10 News: முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர், ஆளுநர் ரவி ஒப்புதல், ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை டாப் 10 செய்தித் தொகுப்பில் காணலாம்.

Top 10 News 23.01.2025: தமிழ்நாடு அரசியல் நிலவரம், வானிலை அப்டேட், உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் தொடர்பான செய்திகளை இன்றைய காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
- இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர்
கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரூ.39 கோடி மதிப்பில் கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்கள் அமைய உள்ளன. கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து, 'இரும்பின் தொன்மை' எனும் நூலையும் அவர் வெளியிடுகிறார்.
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு
வலிப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரனின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் அதில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஞானசேகரனால் வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8 மணிநேரம் கிடுக்குப்பிடி கேள்விகள்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை கிடுக்கு பிடி விசாரணை நடத்தியது. 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி பணம் தொடர்பாக, கடந்த 3ஆம் தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நேற்று ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
- சீமான் வீடு முற்றுகை - 870 பேர் மீது வழக்கு
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றதாக 870 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மே 17 மற்றும் பெரியார் அமைப்புகளை சேர்ந்த திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் உட்பட 870 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 10 நாட்களில் 45,140 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகைக்காகப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்ப, தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 10 முதல் 19 வரை 45,140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகப் போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4.24 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
- ஈரோடு - செங்கோட்டை - ஈரோடு ரயில் சேவைகள் பகுதி ரத்து
24.01.2025 மற்றும் 27.01.2025 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2:00 மணிக்கு புறப்படவுள்ள, ரயில் எண் 16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து செங்கோட்டை வரை இயங்காது. 25.01.2025 மற்றும் 28.01.2025 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 5:10 மணிக்கு புறப்படவுள்ள, ரயில் எண் 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை - கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை இயங்காது; அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயங்கும்.
- ஆளுநர் ரவி ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது. பாலியல் வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
- அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும்போது போதுமான தகவல்களை தெரிவிக்காவிட்டால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.
- வானிலை அப்டேட்
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (23-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 முதல் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தபால் வாக்குப்பதிவு இன்று தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டாபிக்ஸ்