TOP 10 NEWS: வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு! ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!
புறநகர் ரயில்களில் 8.5 லட்சம் பேர் பயணம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு, வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தமிழ்நாட்டில் இன்று (27-01-2025) நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.தினமும் 8.5 லட்சம் பேர் பயணம்!
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணிப்பதாக தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்து உள்ளார். மேலும் பிற ரயில்களில் 3 லட்சம் பேர் சேர்த்து மொத்தமாக நாள் ஒன்றுக்கு 11.5 லட்சம் பேர் ரயில்களில் பயணம்.
2.சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே, சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 17 வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். மோகன்ராஜ், ஹரிஷ் இருவரும் வேகமாக செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து பைக் விழுந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
3.வெம்பக்கோட்டையில் சுடுமண் பொருட்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி, சிறிய வகை மண் குடுவை ஆகியவை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
4.போலீசை கத்தியால் குத்தியவர்கள் கைது
கோவையில் வாகன சோதனையின் போது போலீசை கத்தியால் குத்தமுயன்று தப்பி ஓடிய ரவுடிகள் ஆல்பின், முகமது ஹாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டர். போலீசார் துரத்தியதில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் ரவுடிகளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
5.டெல்டா பாசனத்திற்காக 4000 கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 403 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 110.98 அடியாகவும், நீர் இருப்பு 79.807 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றம்.
6.வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் கடிதம்!
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். “இலங்கை கடற்படையால் கைதான 34 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
7.செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டார். யாசகம் கொடுக்கும் கும்பலை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டார்.
8.தனிநபர் விரோதமாக மாற்ற முயற்சி!
வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். சாதியத்தோடு நடந்தேறிய குற்றத்தை தனிநபர் விரோதமாக திசைத்திருப்ப முயற்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
9.பதவியை பற்றி கவலையில்லை
எனக்கு பதவியைப் பற்றி கவலையில்லை. மக்களை பற்றிதான் கவலை என மதுரை அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
10.மருத்துவர் செரியன் மறைவுக்கு இரங்கல்
உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
