TOP 10 NEWS: ’சீறும் ஆதவ் அர்ஜூனா! டங்ஸ்டனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! ஆதரித்த அதிமுக!' டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட், திருமா குறித்து ஆதவ் அர்ஜூனா அறிக்கை, டங்ஸ்டன் ஏலத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம், தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எதிர்ப்பு, ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
இந்த நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற டாப் 10 செய்திகள் இதோ!
1.சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அறிக்கை
துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்றபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். எப்போதும் தொண்டர்கள் குரலாக இருப்பேன் என ஆதவ் அர்ஜூனா அறிக்கை.
2.ஆதவ் அர்ஜூனா குறித்து திருமா பேட்டி
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் செய்தோம். ஆனாலும் அவரின் அண்மை நிகழ்வின் பேச்சு, கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நம்பகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. இதன் காரணமாக அவரை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளோம். பலமுறை அறிவுறுத்தல் கொடுத்தோம், அதை மீறி நடந்தால் அவசர தேவையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் குறித்து அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.
3.திமுக அழுத்தம் தரவில்லை
ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் திமுக எந்த அழுத்தமும் தரவில்லை. ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டது விசிகவின் முடிவு என அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து.
4.இரவுக்குள் தீர்மானத்தை அனுப்பதிட்டம்
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் ஏலத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு திட்டம்.
5.தீர்மானம் குறித்து தம்பிதுரை விளக்கம்
சுரங்கம் மற்றும் கனிமவள சட்டத்திருத்தத்திற்கு ஆதர்வாக பேசினேன். தமிழ்நாட்டில் சுரங்கம் அமைக்க ஆதரவாக பேசவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எக்காலத்திலும் அதிமுக ஆதரவு அளிக்கவில்லை என அதிமுக எம்.பி.தம்பிதுரை பேட்டி.
6.வெள்ளியங்கிரியில் தீபம் ஏற்ற அனுமதி
கோவை மாவட்டம் வெள்ளியங்கி மலைக்கோயிலில் மகா தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி வரை நத்த பூஜை, கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தெரிவித்து உள்ளது.
7.பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 பேர் கைது
சென்னையில் மன வளர்ச்சி குன்றிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அம்பத்தூரை சேர்ந்த கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8.ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் கண்டனம்
சுரங்கம் மற்றும் கனிம திருத்த சட்டவரைவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காக பேசுவது போல் நடிக்கும் பழனிசாமி அவதூறுகளை பரப்பில் உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் திமுக ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
9.திமுக அரசு மீது ஈபிஎஸ் விமர்சனம்
டங்ஸ்டன் ஒப்பந்தத்தை அறிவித்தது முதல் இறுதி செய்வதது வரை தமிழக அரசு அமைதி காத்தது. தங்கள் தவறு தெரியவந்ததும் பிரச்னையை பூசி மொழுகி, மறைக்க பார்க்கிறது தமிழக அரசு. மத்திஅய் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
10.தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு பொது இடங்களில் புகைப் பிடிப்பது தான் காரணம் என்று மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பொது இடங்களில் புகைப்பதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
டாபிக்ஸ்