TOP 10 NEWS: தமிழகத்தில் சதம் அடித்த வெயில் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில், திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம், புதுச்சேரியில் காங்கிரஸ் போராட்டம், விசிக மாநாட்டில் திமுக பங்கேற்பு
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தியதால் பொது மக்கள் அவதி அடைந்தனர். மதுரையில் 105 டிகிரி பாரண்ஹீட், நாகையில் 104 டிகிரி பாரண்ஹீட், ஈரோட்டில் 102 டிகிரி பாரண்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மே மாதத்தில் பதிவாகும் வெப்ப அலைகளுக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் வெயில் பதிவாகி உள்ளது.
2.திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
செப்டம்பர் 17ஆம் தேதியான நாளைய தினம் திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கும் 175 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
3.பருவமழைக்கு பின்னர் புதிய பாலம்
சென்னை ஓக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல். இந்த பாதையை விரிவாக்கம் செய்வது மற்றும் பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பருவமழை முடிந்த பிறகு புதிய பாலம் கட்டப்படும் எனவும் தெரிவிப்பு.
4.புதுச்சேரியில் காங்கிரஸ் போராட்டம்
புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்திய NR காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தல்
5.சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
6.ராமசாமி படையாட்சிக்கு முதலமைச்சர் மரியாதை
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
7.முதலமைச்சர் ஸ்டாலின் உடன் திருமா சந்திப்பு
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு. மது ஒழிப்பு மாநாட்டின் கோரிக்கைகள் குறித்த விவரங்களை அளித்ததாக தகவல். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக - விசிக கூட்டணியில் விரிசல் இல்லை என்றும் திருமாவளவன் திட்டவட்டம்.
8.விசிக மாநாட்டில் திமுக பங்கேற்பு
வி.சிக. மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என திருமாவளவன் தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சுமார் 10 நிமிடங்கள் திருமாவளவன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
9.டாடா கார் தொழிற்சாலைக்கு அடிக்கல்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் டாடா ஜே.எல்.ஆர் தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
10.காந்தராஜ் மீது வழக்குப்பதிவு
சினிமா நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் அரசியல் விமர்சகர் காந்தராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு.
டாபிக்ஸ்