Top 10 News : பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை, வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 தமிழக மீனவர்கள் கைது என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு, மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகச் வானிலை ஆய்வு மையம் தகவல் என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடேதெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள்ளாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது.
2,553 டாக்டர் பணியிடங்களுக்கு 27ல் தேர்வு
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் வருகின்ற 14 மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1271 செவிலியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரந்தர பணி நியமன ஆணைகள் தரப்படவிருக்கிறது. 27ஆம் தேதி 2553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு 24,000 மருத்துவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறவிருக்கிறது. பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் மருத்துவத்துறையில் உள்ளது போன்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு 38 வழக்குகள், இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் தேர்வு நடத்துவதற்குரிய பணிகளை தொடங்கியிருக்கிறோம்.
இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செயற்கைக்கோள், ராக்கெட் வெப்பநிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பவியல் சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. ஐஐடி சார்பில் டீன் (தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானமும், இஸ்ரோ சார்பில் அதன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு இயக்கக இயக்குநர் விக்டர் ஜோசப்பும் கையெழுத்திட்டனர்.
மேலும் 12 தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அத்துடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகச் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றுமுதல் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடலிலும், வங்கக்கடலிலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தவெகாவில் இணைந்த நாதகாவினர்
நாகப்பட்டினத்தில் வடக்கு பொய்கை நல்லூர், தெற்குபொய்கை நல்லூர் மற்றும் செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் அக்கட்சியில் தங்களை இணைந்து கொண்டுள்ளனர்.நாகையில் இன்று மாற்றுக் கட்சிகளை சேர்ந்தோர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக-வை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக துணை முதலமைச்சரின் துணை செயலாளராக ஆர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த சமயமூர்த்தி, மனித வள மேலாண்மை துறை செயலராக நியமனம். தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சரை தாக்க முற்பட்ட அமமுகவினர்?
உசிலம்பட்டி அருகே அத்திப்பட்டியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிகழ்வு முடிந்து திருமங்கலம் நோக்கி திரும்பியுள்ளார். உடன் அதிமுக கட்சி பிரமுகர்களும் வந்துள்ளனர். அப்போது, மங்கல்ரேவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, ஒரு கும்பல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காரை வழிமறித்து அதிமுக நிர்வாகிகள் காரை தாக்கியதாகவும், அங்கிருந்த அதிமுகவினர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்