திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர்.. சி.என். அண்ணாதுரை நினைவு நாள் இன்று!
CN Annadurai memorial day : சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட அண்ணாவின் நினைவு நாள் இன்று.

1909-ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நெசவை தொழிலாக கொண்ட நடராஜன் மற்றும் பங்காரு அம்மாளுக்கு மகனாக பிறந்தார் பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் சிறுவயதிலேயே பங்காரு அம்மாள் இறந்துவிட அவரது சித்தி ராஜாமணி அம்மாள் தான் அண்ணாவை வளர்த்தார்.
இவர் பச்சையப்பா மேல்நிலை பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். 1934ம் ஆண்டு பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பிறகு, பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தார். தனது 21 வயதில் படித்துக் கொண்டிருக்கும் போதே, ராணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அண்ணாவின் குடும்பம் மிகுந்த ஆன்மீக நம்பிக்கை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக அண்ணா ஒரு நாத்திகராக திகழ்ந்தார். படிப்பு முடிந்த கையோடு, பச்சையப்பா மேல்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். சிறுது காலத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர அரசியல் மற்றும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
அண்ணாதுரை - ராணி தம்பதியருக்கு குழந்தை இல்லாத காரணத்தால் சகோதரியின் பேரப்பிள்ளையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். திரைப்படங்கள் வாயிலாக மக்கள் மனதில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார். அடுக்குமொழி வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1935ம் ஆண்டு நீதிக்கட்சியில் இணைந்தார் அண்ணா.
அப்போது நீதி கட்சியின் தலைவராக இருந்தவர் பெரியார். இவர் நீதி நாளிதழ், துணை ஆசிரியராகவும், விடுதலை பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார். மேலும், குடி அரசு எனும் தமிழ் வார இதழிலும் பங்காற்றி வந்தார். பிறகு, சொந்தமாக திராவிட நாடு என சொந்த பத்திரிகை நடத்தி வந்தார்.
1944ல் நீதி கட்சியின் பெயரை பெரியார் திராவிட கழகம் என மாற்றினார். மேலும், பெரியார், அரசியல் சாரா இயக்கமாக திராவிட கழகத்தை அறிவித்திருந்தார்.
பின்னாளில் பெரியாருடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடு காரணத்தாலும், தேர்தல் அரசியல் ஈடுபாட்டினாலும், திராவிட கழகத்தில் இருந்து 1948ல் பிரிந்தார் அறிஞர் அண்ணா. 1949-ம் ஆண்டு திமுக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1967-ல் தமிழக முதல்வரானார். தான் பதவியேற்ற உடனே, தமிழ், இந்தி, ஆங்கிலம் என இருந்த மும்மொழி கொள்கையை, தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையாக மாற்றினார்.
மதராஸ் மாநிலம் என்றிருந்த பெயரை 1969ம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள், தமிழ்நாடு என பெயர் மாற்றினார். சுயமரியாதை திருமணம் சட்டமாக்கப்பட்டது அண்ணாவின் ஆட்சியில் தான். இளைஞர்கள் படைக்கொண்ட இளம் அமைச்சரவை உருவாக்கி பல திட்டங்களை கொண்டு வந்தார்.
சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். மாநில சுயாட்சிக்காகவும் இந்தி திணிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி காலமானார்.அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்