தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Today Is The Birthday Of Our India's Edison Gt Naidu!

HBD G.D. Naidu: 'எங்கள் இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு' பிறந்த தினம் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 23, 2023 06:04 AM IST

விவசாயிகளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஜிடி நாயுடு கோரிக்கை வைத்தார். ஆனால் அது நடக்காததால் அவர் தன்னிடம் இருந்த பணத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

ஜிடி நாயுடு
ஜிடி நாயுடு (@protosphinx (twitter))

ட்ரெண்டிங் செய்திகள்

தனது சிறு வயதில் தன் ஆரம்ப கல்வியை லட்சுமி நாயக்கன் பாளையம் கிராமத்தில் தொடங்கினார். ஆனால் அவருக்கு பள்ளிக்கு செல்வதில் அவருக்கு ஆர்வம் இல்லை. பள்ளி கல்வியில் தான் ஆர்வம் இல்லையே தவிர விரும்பிய புத்தகங்களை ஆர்வமுடன் படித்து வந்தார். அப்போது அவரது தந்தை வயலில் வேலைக்கு அனுப்பினார். அப்படி ஒரு நாள் வயலில் நடந்து கொண்டிருந்த போது வயலில் கிடந்த பாட்டிலை பார்த்தார். அதில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அப்போது மொழி தெரியாததால் அங்கிருந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் காட்டி கேட்டார். அதற்கு அவர் இது வலி நிவாரணி மருந்து என்றார். இதையடுத்து அவரின் உதவியுடனே அந்த மருந்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து குறைவான லாபத்தில் மக்களுக்கு விற்பனை செய்தார்.

சர்.சி.வி ராமனுடன்  ஜி.டி.நாயுடு
சர்.சி.வி ராமனுடன் ஜி.டி.நாயுடு

இப்படி சிறு வயதில் இருந்தே எளிவர்களுக்கு உதவ அதிக ஆர்வம் காட்டினார். அப்பகுதி விவசாயிகளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஜிடி நாயுடு கோரிக்கை வைத்தார். ஆனால் அது நடக்காததால் அவர் தன்னிடம் இருந்த பணத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

அப்போது ஒருநாள் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆங்கில அதிகாரியின் வாகனம் பழுதடைந்து நின்றது. இதைப்பார்த்த ஜிடி நாயுடு வேறு வகையில் யோசிக்க தொடங்கினார். அங்கிருந்து தொடங்கியது தான் அவரது பயணம். இன்று கோவையின் பெரும் தொழிலதிபரான ஜிடி நாயுடு அன்று ஓட்டல் ஓன்றில் வேலைக்கு சேர்ந்தார்.

பின்னாட்களில் திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராத வகையில் நஷ்டம் ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார். இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவர் போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பேருந்து சர்வீஸ் நடத்தினார்.

‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். தொழில் நுட்பம் பெரிதாக முன்னேற்றம் அடைந்திடாத அந்த காலத்தில் ரேஸர் கார், கால்குலேட்டர், டிக்கெட் மெஷின், ப்ருட் ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர், ரேஸர் பிளேடு உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கியவர் ஜி.டி நாயுடு. இந்தியாவின் தொழில்துறை, மின்சாரம், ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் என பல துறைகளில் தன் அசாத்திய பங்களிப்பை வழங்கினார். இதனால் தான் அவர் இந்தியாவின் எடிசன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு இளைஞர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக்கல்லூரி தற்போது அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் (GCT) என அறியப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையில் துவக்கப்பட்டது என்ற பெருமைக்கு சொந்தகார் அவரே. இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் நிறுவனங்களைக் கவனித்து வருகிறார். ஜிடி நாயுடுவின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் இன்றளவு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிடி நாயுடுவின் சில கண்டுபிடிப்புகள் இதுவரை வெளி உலகிற்கே கொண்டு வரப்பட வில்லை. அவை வெளிவரும்பட்சத்தில் இப்போது வரை உள்ள பல நம்பிக்கைகள் தகர வாய்ப்புகள் உள்ளது என பலர் தெரிவித்துள்ளனர்.

எந்த வாய்ப்பு வசதிகளும் அற்ற கலங்கல் கிராமத்தில் பிறந்து தொடர்ச்சியா தன் உழைப்பால் முன்னேறி இந்த உலகையே தன்னை திருப்பி பார்க்க வைத்த அந்த ஆய்வாளனின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் ஹெச்டி தமிழ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்