HBD Nammalvar: இயற்கை விவசாயம் வேரூன்ற விதையிட்ட நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று!
இன்றைக்கு ஏராளமான படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியதற்கு நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது என்றால் மிகையல்ல!

அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்பதை தாரக மந்திரமாக தான் ஏறி மேடைகளில் எல்லாம் பேசியவர் நம்மாழ்வார்.
இப்படி இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணவு சுழற்சி குறித்து விவசாயம் குறித்து எளிய வகையில் புரிய வைத்தவர் நம்மாழ்வார். தற்சார்பு வாழ்வியல் முறையை முன்னெடுத்து இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை தனது வாழ்நாள் முழுவதும் ஊர் ஊராகச் சென்று பரப்பினார் நம்மாழ்வார்.
நம்மாழ்வாரின் இளமைப்பருவம்
இயற்கை செழித்த தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பின்நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர். 1960-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த உடன் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பசுமைப் புரட்சியால் ஏற்படும் மாற்றங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தனது அரசு பணியை துறந்தார். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் ஏற்பட்ட விளைவுகளை தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார்.
தனது அரசு பணியில் இருந்து விலகிய பின் ஜப்பானியச் சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இளமையின் உந்துதலில் விவசாயத்திற்காகத் தொடங்கிய நம்மாழ்வாரின் நெடும் பயணம் அவரது இறுதி மூச்சு வரை நீடித்து நிலைத்தே விட்டது. இன்றைக்கு ஏராளமான படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியதற்கு நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது என்றால் மிகையல்ல
இயற்கை விவசாயம்
2008-ம் ஆண்டு திருவாரூரில் நடந்த ஒரு விழாவில், இயற்கை விவசாயம் என்பது ரசாயனம் பயன்படுத்தாதது மட்டும் இல்லை. நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களில் அறுவடைக்கு வரும் மரங்களை நட வேண்டும். அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில் விவசாயம் செய்யுங்க. தேக்கு, தென்னை, வாழை, பாக்குனு கலவையா மரங்களை நடணும. ஊடுபயிரா காய்கறிகளையோ, கடலை மாதிரியான பயிர்களையோ விவசாயம் செய்ய வேண்டும் என்றார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் எளிமையாக விளக்கினார். இப்படி விவசாயம் செய்தால் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணா இருக்கும். மேலும் சுழற்சியில் அறுவடைக்கு வரும் போது அது, பொருளாதார ரீதியாவும் பலன் கொடுக்கும் என்றார். இதை சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி கிராமந்தோறும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார்.
பாரம்பரிய விதை மீட்பு
வீரிய ரக விதைகளின் வருகையால் அழிவு நிலையிலிருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், யானை கவுனி என நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். நம் நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாக்களில் ஒருவர்.
பிடி கத்தரி எதிர்ப்பு
இந்தியாவில் பி.டி. கத்திரியை அறிமுகம் செய்வது குறித்து அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அத்தோடு நில்லாமல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர்.
கதறி அழுத நம்மாழ்வார்
பாரம்பரிய விதை குறித்த பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். அதற்கு காரணம் ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தன் பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு கதறி அழுதார் நம்மாழ்வார். அவர் அப்படி அழுதது அவர் சொந்த நலனுக்கானது. இந்த மண்ணுக்கானது. மக்களுக்கானது.
எளிமையின் அடையாளம்
இப்படி வாழ் நாள் முழுவதும் தான் நம்பிய இயற்கை விவசாய முறை ஊக்கு விக்க போராடிய நம்மாழ்வார் காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.
அவரின் நலம் விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால் முடிந்தவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்து விட்டார்.
தன் வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைத்த பண்பாளர் நம்மாழ்வார்.
இப்படி வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வார் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி போராட்டக்களத்திலேயே 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி காலமானார்.
இந்த மண்ணின் ஆரோக்கியத்தை பேணவும், மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கவும் வாழ்நாள் முழுவதும் போராடிய நம்மாழ்வாரின் பிறந்த நாளான இன்று அவர் கடந்த வந்த பாதையை திரும்பி பார்ப்பதில் ஹெச்டி தமிழ் பெரு மகிழ்ச்சி அடைகிறது.

டாபிக்ஸ்