TNEB : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது சரியா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tneb : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது சரியா?

TNEB : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது சரியா?

Priyadarshini R HT Tamil
Published Apr 12, 2024 10:08 PM IST

TNEB : தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழகத்திற்குத் தேவையான அளவு மின்உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மேலும் கடனாளியாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TNEB : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது சரியா?
TNEB : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது சரியா?

இருப்பினும், 2021-22ல் மின்சாரத்தை ரூ.39365.23 கோடிக்கு விலைக்கு வாங்கிய நிலையில், 2022-23ல் அது ரூ.50,990.78 கோடிக்கு மின்சாரத்தை வெளியிலிருந்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.

இந்தாண்டு ரூ.65,000 கோடிக்கு மின்சாரத்தை தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியில் இருந்து வாங்க வேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, ஏப்ரல் 20, 2023ல் மிக அதிகமாக 423 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழஙத்திற்குத் தேவைப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஏப்ரல் 5, 2024ல் 441 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டது என்றாலும், இந்த மதிப்பு தற்போதைய கோடைக் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச்சிலிருந்தே தமிழகத்திற்கு தினசரி மின்தேவை 400 மில்லியன் யூனிட் என இருக்க, தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெறும் 90 மில்லியன் யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்கிறது.

தமிழக மின்தேவையில் 20 சதவீதம் மட்டுமே தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தயாரிக்கிறது.

இந்தாண்டு நீர் இல்லாத காரணத்தால், கடந்தாண்டை விட, நீர் மின்சக்தி உற்பத்தி (Hydro-Power) 50 சதவீதம் குறைவாகவே உள்ளது. 2023-24ல் நீர் மின்உற்பத்தி கடந்த 7 ஆண்டுகளிலேயே, மிகக் குறைவாக 3,000 மில்லியன் யூனிட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை சாமாளிக்க, தமிழக அரசு மே மாதம் வரை 4,500 மெகாவாட், அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி முதல் மே, 2024 இடைப்பட்ட காலத்தில் மட்டும் ரூ.4,600 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

2023ல் அதே காலகட்டத்தில் தமிழக அரசு ரூ.2,400 கோடிக்கு மட்டும் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து வாங்கியுள்ளது.

இந்தாண்டு மின்தேவையை பூர்த்திசெய்ய ரூ.65,000 கோடிக்கு மின்சாரத்தை தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிக விலை கொடுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆண்டுக்கு, வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும், ரூ.13,450 கோடியை செலவழிக்கிறது.

தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தவறுகள் –

நாளொன்றுக்கு 400 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவை என இருக்க, வெறும் 20 சதவீதம் மட்டும் (90 மில்லியன் யூனிட்) தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்வது எப்படி சரியாகும்? தேவையான மின்சாரத்தை சுயசார்புடன் தயாரிக்க தமிழக மின்துறை முன்வர வேண்டாமா?

அரசு தரப்பில் மின்உற்பத்தியை அதிகரிக்க, ஏன் புதிய திட்டங்களை (உடன்குடி, எண்ணூர்) நடைமுறைப்படுத்தவில்லை?

வடசென்னை, தூத்துக்குடி மின் உற்பத்தி நிலையங்கள் ஏன் அதன் செயல்திறனை அதிகரிக்காமல், 50 முதல் 60 சதவீதம் செயல்திறனில் (Plant Loading Factor) மட்டும் இயங்க வேண்டும்?

ஏற்கனவே இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தி, (நவீனப்படுத்தி) மின் உற்பத்தியை கூட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ஏன் மேற்கொள்ளவில்லை.?

தனியாரிடம் ஏன் அதிக விலை கொடுத்து 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும்? தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும்போது அதில் ஊழல்கள் நடைபெற்று அரசுக்கு நிறைய பணம் தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கு (மறைமுகமாக அரசிற்கு) செல்வதாக வலுவான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதன் காரணமாகவே, அரசு அல்லது தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை ஊக்குவிக்கிறதா? என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

மின்தேவையை பூர்த்தி செய்ய அரசு ஆற்றல் பரிமாற்ற (Power Exchange) நிறுவனங்களுக்கு, 1 யூனிட் மின்சாரம் ரூ.10 என அதிக விலை கொடுத்து வாங்குகிறது. ஏன்?

மொத்தத்தில், நட்டத்தில் இயங்கும் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல், சுய மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்காமல், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி, மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மேலும் நட்ட வலைக்குள் தள்ளுவது எப்படி சரியாகும்?

சுருக்கமாக, நிர்வாக சீர்கேட்டால் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேலும் நட்டத்தை சந்திக்கும்போது, அதை ஈடுகட்ட மக்களிடம் அதிக மின்கட்டணத்தை, தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாங்க முனைவது எப்படி சரியாகும்?

தமிழக அரசு மேற்சொன்ன கருத்துகளை கருத்தில் கொண்டு,உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முன்வருமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.