Kalpana Nayak: ’பெண் ஐபிஎஸ் அறையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு நாசவேலை காரணமா?’ கல்பனா நாயக் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!
இதுவரை நடத்தப்பட்டவிசாரணையின் அடிப்படையில், திருமதி கல்பனா நாயக், ஐபிஎஸ் அவர்கள் உயிருக்கு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை

பெண் ஏ.டி.ஜி.பி. அறையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு நாசவேலை காரணம் அல்ல என டி.ஜி.பி. விளக்கம் அளித்து உள்ளார்.
கல்பனா நாயக் குற்றச்சாட்டு
தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தால் தன்னை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம்சாட்டி இருந்தார். ஏடிஜிபியின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.
தமிழ்நாடு டிஜிபி விளக்கம்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூடுதல் காவல் இயக்குநராக உள்ள திருமதி கல்பனா நாயக் அவர்களிடம் இருந்து காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கடிதம் பெறப்பட்டது. தனது கடிதத்தில், சென்னை எழும்பூரில் உள்ள TNUSRB அலுவலகத்தில் 28.07.2024 அன்று நடந்த தீ விபத்து குறித்து அவர் புகார் அளித்தார். மேலும் இந்த சம்பவத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும் குற்றம் சாட்டினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.