S.Ve.Shekher : ‘2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகர் போதும்..’ முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
‘மயிலாப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய தெருவிற்கு அவருடைய தந்தையாரின் பெயரை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நிச்சயமாக, உறுதியாக அந்தப் பெயர் விரைவில் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த பெயர் நிச்சயமாக விரைவில் சூட்டப்படும், சூட்டப்படும்..’

நடிகர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் 50-ஆம் ஆண்டு விழா, நாடகப்பிரியா நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமனின் நூற்றாண்டு விழா மற்றும் நாடகப்பிரியாவின் 7000-ஆவது நாடக விழா ஆகிய இந்த மூன்று விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பேசியதாவது:
‘நாடகப்பிரியா அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களின் நூற்றாண்டு விழா - எஸ்.வி.சேகரின் ஏழாயிரமாவது நாடக விழாவில் பங்கெடுத்து வாழ்த்துச் சொல்லக்கூடிய அல்லது சில நிமிடங்கள் உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய சேகர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் பேசும்போது நம்முடைய முதல்வர், நம்முடைய முதல்வர் என்று சொன்னார். அதனால், நம்முடைய சேகர், நம்முடைய சேகர் என்று நானும் சொல்கிறேன்.
உத்தரவு போட்ட எஸ்.வி.சேகர்
நம்முடைய எஸ்.வி.சேகர் அவர்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, என்னைப் பார்க்கவேண்டும் என்று என்னிடத்தில் தேதி கேட்டு, அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்கள். அங்கே என்னிடத்தில் ஒரு கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்று சொல்லமாட்டேன், ஒரு உத்தரவை என்னிடத்தில் வைத்தார். என்னவென்று கேட்டால், ‘இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். ஏழாயிரமாவது நாடகத்தை உங்கள் தலைமையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம். என்னுடைய தந்தையாரின் நூற்றாண்டு விழாவை அந்த நிகழ்ச்சியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். என்னுடைய நாடகக் குழுவினர் அத்தனை பேருக்கும் நீங்கள் கேடயம் வழங்கிடவேண்டும். நீங்கள் வந்து பேசக்கூட வேண்டாம். 10 நிமிடம் நாடகத்தைப் பார்த்துவிட்டு, கேடயம், பரிசுகளை மாத்திரம் வழங்கிவிட்டு போனால் போதும்,’ என்றுதான் என்னிடத்தில் சொன்னார்.
