CM MK Stalin: "ஒன்றுபட்டு நிற்போம்.. வென்று காட்டியே தீருவோம்" - முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Mk Stalin: "ஒன்றுபட்டு நிற்போம்.. வென்று காட்டியே தீருவோம்" - முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

CM MK Stalin: "ஒன்றுபட்டு நிற்போம்.. வென்று காட்டியே தீருவோம்" - முதல்வர் ஸ்டாலின் சூளுரை!

Karthikeyan S HT Tamil
Published Mar 19, 2024 05:01 PM IST

Loksabha Election 2024: கடந்த 10 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத, மாநில உரிமைகளை பறித்த ஆட்சியை விரட்ட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019 நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது. தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!." என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.