தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’மகளிர் உரிமை தொகை உயர்வு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை!’ பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய தினம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

2025-26ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை சட்டப் பேரவையில் தாக்கல் செய்கிறார்.
திமுக அரசின் 4வது பட்ஜெட்
2023 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தென்னரசுவின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் இதுவாகும். 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசின் 4வது பட்ஜெட் இதுவாகும். நாளைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17-ம் தேதி தொடங்குகிறது.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட்: ’ஈட்டிய விடுப்பு முதல் பத்திரப்பதிவு தள்ளுபடி வரை’ கடைசி நேரத்தில் தங்கம் தென்னரசு சொன்ன 4 அறிவிப்பு
பொருளாதார ஆய்வறிக்கை
இதனிடையே நேற்றைய தினம் தமிழ்நாடு அரசின் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது. 2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது; பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது. 2022-23இல் ரூ.278 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு என்ன?
அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அறிவிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இன்றைய தினம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புயலை கிளப்பும் டாஸ்மாக் முறைகேடு
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கலுக்காக இன்று கூடும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இதனை சட்டப்பேரவையில் எழுப்ப கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இக்கட்சிகள் மாநில அரசை சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மேலும் படிக்க:- தமிழ்நாடு பட்ஜெட் 2025: ’உரிமை தொகை கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!’ தங்கம் தென்னரசு வெளியிட்ட ’நச்’ அறிவிப்பு!
பட்ஜெட் தாக்கல் ஒளிபரப்பு
இன்றும், நாளையும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை தமிழ்நாடு முழுவதும் 900க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை மற்றும் திருவான்மியூர் கடற்கரை உட்பட நகரம் முழுவதும் 100 இடங்களில் பட்ஜெட் விளக்கக்காட்சி காலை 9:30 மணி முதல் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜி.சி.சி) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தேசிய பொருளில் பேசு பொருளான ₹ சின்னம் மாற்றம்!
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள லோகோவில் இந்திய ரூபாய் குறியீடு ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான ’ரூ’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது பெரும் விவாத பொருளாகி உள்ளது. மும்மொழி கொள்கையை மத்திய அரசு திணித்து வரும் நிலையில், அதற்கு பதில் தரும் வகையில் அடையாள போராட்டமாக இதை செய்வதாக திமுக செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தேசிய நாணய சின்னத்தை மாற்றியதற்காக திமுக அரசை விமர்சித்து உள்ளார். "திமுகவுக்கு ' ₹' என்பதில் பிரச்சினை இருந்தால், 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் இது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, மத்தியில் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக திமுக இருந்த நேரத்தில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
